சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், தருண் 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் தலா 2 வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வலுதியூரை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண் ஆகியோருக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையை உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து வீரர்களை வாழ்த்தினார்.
அத்துடன் வீரர்கள் இருவருக்கும் ஒரு பவுன் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் இந்திய தடகள சம்மேளன செயலாளர் சி.கே.வல்சன், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா, சீனியர் துணை தலைவரும், போலீஸ் இணை கமிஷனருமான சுதாகர், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் பெர்னாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் 27 வயது ராணுவ வீரரான ஆரோக்ய ராஜீவ் அளித்த பேட்டியில், ‘ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனது செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதற்கு சத்தான உணவுகளை எடுத்து கொள்வதும் ஒரு காரணமாகும். தேசிய பயிற்சி முகாமில் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் ஒரே மாதிரியான உணவு வகைகள் தான் அளிக்கப்படுகிறது.
வீரர்கள் கலந்து கொள்ளும் பந்தயத்திற்கு தகுந்த மாதிரி உணவு வழங்க வேண்டும். தினமும் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிடும் போது ஒருவித சலிப்பும் ஏற்படுகிறது. தேசிய பயிற்சி முகாம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டால் சவுகரியமாக இருக்கும். அடுத்து ஆசிய மற்றும் உலக தடகள போட்டி குறித்து கவனம் செலுத்த இருக்கிறேன். நவீன தொழில்நுட்ப வசதியை சரியாக பயன்படுத்தி கடுமையாக உழைத்தால் நம்மால் ஒலிம்பிக் போட்டியிலும் சாதிக்க முடியும்’ என்று தெரிவித்தார்.
21 வயதான தருண் அளித்த பேட்டியில், ‘காயத்தில் இருந்து மீண்டு வந்து 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 48.96 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை என்னால் நம்பமுடியவில்லை. ஐரோப்பாவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டது எனது திறனை மேம்படுத்த உதவிகரமாக இருந்தது. அடுத்து ஆசிய மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகுவதில் கவனம் செலுத்த இருக்கிறேன். தீவிர பயிற்சி மேற்கொண்டு எனது திறமையை வளர்த்து கொண்டால் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற முடியும். இந்திய அணியின் பயிற்சி முகாமை பாட்டியாலாவுக்கு பதிலாக திருவனந்தபுரத்துக்கு மாற்றினால் நன்றாக இருக்கும். வேலைவாய்ப்பு எனக்கு வரத் தான் செய்கிறது. இருப்பினும் நல்ல வேலைவாய்ப்புக்காக காத்து இருக்கிறேன்’ என்று கூறினார்.