மரங்கள் மிக மிக முக்கியமானவை. மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் முதுகெலும்பாக மரங்கள் உள்ளன. ஆக்ஸிஜனை வெளியேற்றி, கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க மரங்கள் உதவுகின்றன.
உலகில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆம்புலன்ஸ் இருக்கும் போது, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மரங்களுக்கும் ஆம்புலன்ஸ் இருந்தால் என்ன என்று, இந்தியாவின் பசுமை மனிதர் என அழைக்கப்படும் டாக்டர்.கே. அப்துல் கானி எண்ணினார். இந்த தனித்துவமான கருத்தை சாசா குழுமத்தின் நிறுவனர் சுரேஷ் கே ஜாதவ் ஆதரித்ததால் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் உயிர்ப்பெற்றது.
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ட்ரீ ஆம்புலன்ஸ் திட்டத்தின் முதல் கட்டத்தை கடந்த 2019 மே 22 உலக உயிர் பன்முகத்தன்மை தினத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்று ஜனவரி 11ஆம் நாள் ட்ரீ ஆம்புலன்ஸ் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் ட்ரீ ஆம்புலன்ஸ் மொபைல் ஆப், ட்ரீ ஆம்புலன்ஸ் ஹெல்ப்லைன் எண் *8939 085 085* மற்றும் தானியங்கி மரம் மண்வெட்டி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
தானியங்கி மர மண்வெட்டி உருவாக்கத்தில், பிருத்வி கிருஷ்ணன் தனது நிபுணத்துவத்தை அளித்துள்ளார். விழாவில் பேசிய கிரண் பேடி தனது வாழ்க்கை கதைகளை பகிர்ந்து கொண்டார், அது மரங்கள் மற்றும் இயற்கை மீதான அவரது அன்பைக் காட்டியது. இந்த ட்ரீ ஆம்புலன்ஸ், இந்தியா முழுவதும் உள்ள மரங்களை காப்பாற்றும் பயணத்தைத் தொடரும்.