புவனேஸ்வரை சேர்ந்தவர் பாசுதேவ். எம்பிஏ பட்டதாரியான இவருக்கு முதல் திருமணத்தின் மூலம் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற பாசுதேவ் இரண்டாவதாக திருநங்கை மேக்னா என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்து முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தில் புவனேஸ்வர் மேயர் ஆனந்த் நாராயண் ஜெனா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதவிர ஏராளமான உள்ளூர் மக்களும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் குறித்து மேக்னா கூறுகையில் ”இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தடைகளை மீறி பாசுதேவ் என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருநங்கைகள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என மக்கள் கருதுகின்றனர். அது தவறு என நான் நிரூபித்திருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். 3 வருடங்களுக்கு முன்பே திருநங்கைகளின் உரிமைகளை அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.