தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்கிற திரைப்படமாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர். ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் .
இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் “டிராபிக் ராமசாமி” படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
சினிமாத்துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு ,அரசியல் என்று இருப்பவர் குஷ்பு. இவர்கள் இருவரும் அரசியலில் கொள்கை ரீதியாக வெவ்வேறு இரு முனைகளில் நின்றவர்கள். இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதையும் நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது .இவர்கள் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் விக்கி கூறும் போது ” நம் சமுதாயத்துக்காக யாரையும் எதிர்பார்க்காமல் ஒன் மேன் ஆர்மியாக 18 ஆண்டுகள் போராடி வரும் ஒருவரை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.அவரது “ஒன் மேன் ஆர்மி’ என்கிற வாழ்க்கைக் கதையைப் படித்த போது இதைப் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர் மன வலிமை உள்ளவர். ஆனால் பழக எளிமையானவர். எஸ்.ஏ.சி அவர்கள் நடிக்க முன் வந்ததுமே படம் பெரிய அளவில் மாறிவிட்டது.” என்கிறார்.
படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும் போது “டிராபிக் ராமசாமி வாழ்க்கையைப் பற்றி முழுதாக அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் அவருக்கும் காதல் திருமணம், சட்டப் போராட்டம் போன்று பலவற்றில் ஒற்றுமைகள் இருந்தன. அவரை நேரில் சந்தித்த போது 83 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பா என்று வியப்பூட்டினார். அவரது உடல் மொழிகளை நேரில் கவனித்துக் கற்றுக் கொண்டேன் அதன்படி படத்தில் நடித்தேன்” என்கிறார். தன்னைப் பற்றி உருவாகிற படம் பற்றி டிராபிக் ராமசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் பேசும் போது, “என்னைப் பற்றிப் படமெடுக்க முன் வந்தது மகிழ்ச்சி. யார் யாரோ கேட்டார்கள் ஆனால் யாரும் துணிச்சலாக முன்வரவில்லை. இவர்கள் வந்திருக்கிறார்கள். இதுவே தமிழ் நாட்டுக்கு வரப்போகும் பெரிய மாற்றத்துக்கான அறிகுறி என்று கூறலாம்.” என்கிறார்