சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ இந்த ஆக்ஷன் த்ரில்லர் சூப்பர்ஹிட்டாக மட்டுமல்லாமல் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் தேசம் முழுவதிலும் இருந்து முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கு பெற்றிருக்கும் இப்படம் தான், சந்தேகத்திற்கு இடமின்றி இப்போதைய ஹாட் டாபிக். ஆனால் இது வெறும் ஆரம்பம் தான். பதான் மூலம் ஷாருக்கான் இந்தியத் திரை சாதனைகளில் தன் பெயரைப் பொறித்துள்ளார், ஜவான் அதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும்.
பதானின் வெற்றியால், ஜவான் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் உரிமையை டி-சீரிசுக்கு விற்றதன் மூலம், 250 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இந்நிலையில் ஜவான் நிச்சயம் தென்னிந்தியாவில் சிறந்த வர்த்தகத்தைச் செய்யும். இயக்குநர் அட்லீ உடைய இயக்கம் தென்னிந்திய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துமென வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
வலுவான தென்னிந்தியத் தொடர்பு
சமீபத்தில், தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “ஜவானில் விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ என அனைத்து தென்னக நட்சத்திரங்களும் பங்கு கொண்டுள்ளதால், இந்தப் படம் நிச்சயம் நல்ல வெற்றி பெறும். இவர்கள் அனைவரும் தென்னக பார்வையாளர்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலம், அவர்களை விரும்பும் தென்னிந்திய ரசிகர்களால், இந்தப் படம் தெற்கில் சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளது, குறிப்பாக ஜவான் ப்ரீவ்யூ வெளியீட்டிற்குப் பிறகு, இப்படம் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலர் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கையில், திரைப்பட நிபுணர் ஸ்ரீதர் பிள்ளை முத்தாய்ப்பாக ஒரு படி மேலே சென்று, “தென்னிந்தியக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டிருப்பதால், ஜவானின் முக்கிய சந்தையாகத் தென்னிந்தியா இருக்கும். தென்னிந்தியாவில் இப்போது ஜவானைச் சூழ்ந்துள்ள பரபரப்பு நாம் பொதுவாகப் பெரிய பட்ஜெட் தென்னிந்தியப் படங்களுக்கு மட்டுமே இருப்பது. இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் ஷாருக்கான் மற்றும் தென் மாநிலங்களில் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. ஜவான் படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பு அசல் தமிழ்ப் படத்தைப் போலவே இருக்கும். மேலும், இயக்குநர் அட்லீ கோலிவுட்டில் இதுவரை வெற்றிப்படங்களை மட்டுமே வழங்கியுள்ளார், மேலும் இங்கு அவர் பல நல்ல சாதனை படைத்துள்ளார். ஜவானும் கண்டிப்பாக அதில் இணையும்.
தென்னிந்தியச் சந்தையில் ஜவானுக்கான பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை இப்போதைக்குக் கணிப்பது கடினம் என்றாலும், படத்தின் உரிமைகள் நன்றாக விற்கப்படும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டு உரிமை சுமார் 20 கோடிக்குப் போகலாம். அதே சமயம் கேரள உரிமைகள் 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மாநிலங்களில், தெலுங்குப் பதிப்பை விட, ஹிந்திப் பதிப்பு சிறப்பாகச் செயல்படும் என, ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவைப் பொறுத்தவரை, பெங்களூரில் SRK க்கு நல்ல சந்தை உள்ளது, மேலும் அங்குப் பட உரிமைகள் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SRK வின் இந்த திரைப்படம் இதுவரை டப்பிங் செய்யப்பட்ட எந்த ஹிந்தி படத்தை விடவும் சிறந்த வணிகத்தைப் பெற்றிருக்கும்,” என்று வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறினார், மேலும் “ஜவான் ப்ரிவ்யூ தமிழ் பதிப்பு இங்கே ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது, மேலும் இது ஒரு தென்னிந்தியத் திரைப்படமாகத் தெரிகிறது. அத்துடன். உள்ளடக்கமும் நன்றாக இருந்தால், தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலை இப்படம் எளிதாகப் பெற்றுவிடும் என்றார்.
மும்பையிலும் இத்திரைப்படத்தின் வர்த்தகம் வெகு உற்சாகமாகப் பேசப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். UFO Moviez India, Film Distribution இன் CEO பங்கஜ் ஜெய்சிங் கூறுகையில், “சாதனைகள் என்பவை முறியடிக்கப்படத்தான் – அது ஷாரூக்கால் அல்லது வேறு யாரால் செய்யப்பட்டாலும் சரி அனைவரும் முந்தைய சாதனையை முறியடிக்கவே விரும்புகிறார்கள். ஜவான் படத்தில் இதற்கான அத்தனை அம்சங்களும் உள்ளன. SRK உண்மையில் பதான் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துள்ளார். இரண்டாவதாக, இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் எனப் பல திறமைகள் இந்தப்படத்தில் உள்ளன. மூன்றாவதாக, ஆக்ஷன் திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியா டுடே கட்டுரையின் பகுதியிலிருந்து இந்த செய்தி உருவாக்கப்பட்டது.