தமிழகத்தில் ரூ.170 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் நேரியல் முடுக்கிகள் (Linear Accelerator) புதியதாக 10 இடங்களில் அமைக்கப்படும்
இன்று (31.05.2018) சென்னை எழும்பூர் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, அரசு அலுவலர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட அறிவிப்பு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி, உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,
ஒவ்வொரு வருடமும் மே 31ம் நாள் உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் – புகையிலையும் இதயநோயும் (“Tobacco and Heart Disease”) என்பதாகும். ஒவ்வொரு சிகரெட்டிலும் 4000-க்கு அதிகமான நச்சுப்பொருட்கள் காணப்படுகின்றன. இதில் சுமார் 50 நச்சுப் பொருட்கள் புற்றுநோயை உருவாக்கவல்லது. தொடர்ச்சியான புகை பிடித்தலினால் பக்கவாதம், மாரடைப்பு, கண்பார்வை பாதிப்பு மற்றும் நுரையீரல், வாய் குடல் மூச்சுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுகின்றன. தொடர்ச்சியாக புகைப்பழக்கம் உள்ள மனிதனின் ஆயுள்காலம் பாதியாக குறையும். ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும் மனிதன் தன் வாழ்நாளில் 14 நிமிடங்களை இழக்கிறான். தினமும் எளிமையான உடற்பயிற்சிகள், யோகா, இனிமையான பாடல்கள் கேட்டல் முழுமையான மனமாற்றம் ஆகியவற்றின் மூலம் புகை பழக்கத்தில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சியோடு நீண்ட ஆயுளோடு வளமாக வாழ முடியும்.
புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. தேசிய குடும்ப நல ஆய்வு 2015-2016ன்படி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை 40.1 சதவீதத்திலிருந்து 31.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. “சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரம், வணிகம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் பகிர்ந்தளித்தல் தடைசெய்தல்) தடுப்புச்சட்டம், 2003” (COTPA) பொது இடங்களில் புகை பிடித்தலை தடை செய்கிறது, சிறார்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதையும், சிறார்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதையும் தடை செய்கிறது. புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அனைத்து வட்டாரஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆலோசனை மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ரூ.170 கோடி மதிப்பில் நேரியல் முடுக்கிகள் (Linear Accelerator) சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராயப்பேட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை மற்றும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய 10 இடங்களில் விரைவில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், கோயம்புத்தூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 அரசு மருத்துவமனைகளில் ரூ.1.50 கோடி செலவில் புற்றுநோயாளிகளுக்கான 10 வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிசிக்சை மையங்கள் அமைக்கப்படும்.
மேலும் ரூ.69 கோடி மதிப்பில் விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய கோபால்ட் சிகிச்சை அலகுகள் அமைக்கவும், 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்போதுள்ள கோபால்ட் சிகிச்சை அலகுகள் மாற்றியமைக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் மரு. கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் திரு. அன்புச்செல்வன், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு. குழந்தைசாமி, இணை இயக்குநர் மரு.சோமசுந்தரம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.