தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேதமடைந்த நடுக்குப்பம் மீன் சந்தையை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் 28.1.2017 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது பாதிக்கப்பட்ட மீன் சந்தையை முழுவதும் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட அப்பகுதி மீனவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர். அப்போது நடுக்குப்பம் மீன் விற்பனை சந்தை முழுவதுமாக சேதமடைந்ததை கண்டறிந்தனர். மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மீன் விற்பனை சந்தையை உடனடியாக சீரமைத்துத் தருவது அவசியமாகும். இதனடிப்படையில், தற்காலிகமாக மீன் விற்பனை செய்ய ஏதுவாக சாலையின் தெற்கு பகுதியில் மீன் வளத்துறை மூலம் தற்காலிக சந்தை அமைக்கப்படும். இது இன்னும் ஒரிரண்டு நாட்களில் முடிக்கப்பட்டு விடும் என்பதை தெரிவித்துக கொள்கிறேன். மேலும், நிரந்தர மீன் விற்பனை சந்தை ஒன்று அந்தப் பகுதியில் அமைத்துத் தரப்படும். சென்னை பெருநகர மாநகராட்சி மூலம் சாலையின் வடக்கு பகுதியில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு நிரந்தர, நவீன மற்றும் சுகாதாரமான மீன் சந்தை உடனடியாக அமைத்துத் தரப்படும். சமூக விரோதிகளால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் நடுக்குப்பம் மட்டுமல்லாது அருகிலுள்ள மாட்டாங்குப்பம் மற்றும் அயோத்தி குப்பம் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மீனவர்களின் சேதமடைந்த உபகரணங்கள் குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் உடனடியாக கள ஆய்வு செய்து மதிப்பீடு செய்வார்கள். இந்த சேத மதிப்பீட்டின் அடிப்படையில் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 23.1.2017 அன்று நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 312 பேர்களும், பிற மாவட்டங்களில் 175 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரும், இதர மாவட்டங்களில் 15 பேரும் மாணவர்கள். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இம்மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். காவல் துறையை சேர்ந்த ஆண் மற்றும் பெண் காவலர்கள், தீ வைத்தல், வன்முறை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டது போன்று சமூக வலைத் தளங்களில் பரவியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் தொடர்பாக, சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் சென்னை மாநகர காவல் துறையின் கணிணி வழி குற்றப்பிரிவினரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை கணிணி மற்றும் தடயவியல் வல்லுநர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்விசாரணையின் முடிவில் காவல் அதிகாரிகள் மேற்கூறிய சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக 23.1.2017 அன்று சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் இவ்விசாரணையை மேற்கொள்வார். இந்த விசாரணை ஆணையத்திற்கு கீழ்க்கண்ட ஆய்வு வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.
அ. 23.1.2017 அன்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு மூலமாக இருந்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறியவும் அதனால் பொது மற்றும் தனியாரின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து விசாரித்தல்;
ஆ. சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் உரிய அளவில் பலப்பிரயோகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரித்தல்;
இ. காவல் துறையினரின் செயல்பாட்டில் அத்துமீறல் இருந்ததா என்பதை விசாரிக்கவும்; அவ்வாறெனில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குதல்;
ஈ. இனி வரும் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தல்;
இவ்விசாரணை ஆணையம் தனது விசாரணையை முடித்து அரசிற்கு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.