தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பதவியேற்பு விழா மற்றும் பொங்கல் விழா நேற்று முன் தினம் வெகு விமர்சையாக நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் திரு. ஐசரி கணேசன், இயக்குனர் திரு. கஸ்தூரிராஜா மற்றும் தயாரிப்பாளர் திருமதி விமலா பிரிட்டோ, நடிகர் திரு .ஆரி , மக்கள் தொடர்பாளர் சங்க செயலாளர் திரு ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து திரு. ஐசரி கணேசன் அவர்கள் பேசுகையில்..
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆரோக்கியமானதொரு தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறீர்கள். அதற்கும் எனது வாழ்த்துக்கள். திரு. கஸ்தூரிராஜா அவர்களை இதற்கு முன்பு ‘ துள்ளுவதோ இளமை’ படத்தின் படப்பிடிப்பு வேளையில் சந்தித்து இருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அந்த படத்தில் நானும் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்திருக்கிறேன். மேலும் அவரது மகன் தனுஷை அடிக்கும்படி எனக்கு ஒரு காட்சி கொடுக்கப்பட்டது. படத்தின் இயக்குனர் செல்வராகவன் உண்மையாகவே தனுஷை அடிக்கும் படி என்னிடம் கூறினார். அந்த நினைவுகள் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழா மற்றும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்வாக இருக்கிறது. தொடர்ந்து வரும் காலங்களில் என்னால் இந்த சங்கத்திற்கு என்ன செய்ய முடியுமோ தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்று தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.
விழாவில் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய இயக்குனர் திரு. கஸ்தூரிராஜா,
உங்கள் கைகளில் இருப்பது எழுதுகோல் . ஒரு எழுதுகோல் போதுமானது எதையும் மாற்ற. அரை நூற்றாண்டாக அதற்கு முன்பு இருந்தும் தமிழ்நாட்டை ஆண்டது எழுதுகோல் தான் . பராசக்தி தொடங்கி இன்று வரை தமிழ் திரையுலகத்தை ஆண்டு கொண்டிருந்தது எழுதுகோல் தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற பொக்கிஷத்தை நமக்கு கொடுத்தது எழுதுகோல் தான் அந்த எழுதுகோலுக்கு சொந்தக்காரர்களாக உங்களை எங்களைப் போன்ற படைப்பாளிகளை படைக்கும் படைப்பாளிகளாகிய உங்களை நான் கேட்பது ஒன்றுதான் எழுதுவதற்கு ஆயிரம் நல்ல விஷயங்கள்,பொதுப் பிரச்னைகள் இருக்கும் போது தனிமனித வாழ்க்கையைப் பற்றி எழுதுவது மட்டுமே குறிக்கோளாக சிலர் கொண்டுள்ளனர். அவங்களுடைய சிந்தனை கொச்சையாக இருக்கிறது. இதனால் அந்த குடும்பம் எப்படி பாதிப்படையும் , எந்த அளவிற்கு சங்கடங்களை சந்திக்கும் என யோசித்து எழுதுங்கள். நீங்கள் நினைத்தால் உங்கள் எழுதுகோல் நினைத்தால் வரலாறு படைக்கலாம். உங்கள் எழுத்துச் சுதந்திரத்தை நல்ல செயல்களுக்கு பயன்படுத்துங்கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் மற்றும் வெற்றி பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்கள் ‘ என தனது உரையை முடித்தார்.
திருமதி. விமலா பிரிட்டோ பேசுகையில்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். ஐந்து வருடங்களாக ஒரு பெண் தலைமையில் மிகவும் சிறப்பாக இயங்குகிறது இந்த சங்கம். எத்தனையோ வேலைகள் இருப்பினும் அழைத்தவுடன் வருவதற்குக் காரணம் திருமதி. கவிதாவின் சீரான செயல்பாடுகள்தான். இந்த மேடையில் நான் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். ஒரு சில பத்திரிகையாளர்கள் மைக்கைப் பிடித்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம், என்ன செய்தி வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்னும் மனநிலையில் உயிரோடு இருக்கும் ஒருவரைக் கூட இறந்து விட்டதாகச் செய்திகள் பரப்புகிறார்கள். இதனால் அந்தக் குடும்பம் எவ்வளவு பாதிக்கப்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தனிமனித அந்தரங்கங்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்
நடிகர் ஆரி பேசுகையில்
ஆரோக்கியமான தேர்தல் மூலம் நல்ல உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து இருப்பது போல் நல்ல பத்திரிக்கையாளர்களையும் கண்டெடுத்து தேவையில்லாத களைகளை பிடுங்கி எறிய வேண்டும். பத்திரிக்கை தர்மத்தை நீங்கள் நினைத்தால் காப்பாற்ற முடியும் . உங்களுக்குள்ளேயே இருக்கும் ஒரு சில கருப்பாடுகளையும் களையெடுத்து ஆரோக்கியமான பத்திரிக்கை துறையை உருவாக்க பாடுபட வேண்டும். உங்களுக்கென ஒரு தனி யூடியூப் சேனல் குறித்தும் திட்டமிடுங்கள் அது உங்களுக்கே நன்மையும் வருமானமும் தரும் என்று கேட்டுக்கொண்டு பொங்கல் வாழ்த்துக்கள் கூறி உரையை முடித்தார்.
விழாவின் அங்கமாக தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்க பட்டது.. சங்க உறுப்பினர்களுக்கு 25 கிலோ அரிசி, மற்றும் பொங்கல் தொகுப்புகள் அடங்கிய பை வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது..