திலீப்பிற்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாவனாவை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். மொத்தம் 85 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திலீப், 4 முறை ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார். திலீப் வெளியே வந்தால், சாட்சியங்களை அவர் கலைத்து விடுவார் என்று அரசு தரப்பு அவரின் ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனிடையே, 5-வது முறையாக திலீப் தரப்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விசாரணையின் போதும், திலீப்பை ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை அழித்து விடுவார் எனக் கூறி அரசு தரப்பு அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், திலீப் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் ஆகியும் தற்போது வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததை அவரது தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டி ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நடிகர் திலீப்பிற்கு ஜாமீன் வழங்கியுள்ளது.