ஜல்லிக்கட்டுக்கு கோர்ட்டில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான ‘பீட்டா’வில் நடிகை திரிஷா முக்கிய அங்கத்தினராக இருந்து பிராணிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். சென்னையில் தெருவோரம் திரியும் நாய்களை பிடித்து குளிப்பாட்டி வளர்த்து தத்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். பிராணிகளுக்காக தனியாக பாதுகாப்பு இல்லம் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளார். பிராணிகள் மீது திரிஷா காட்டும் இந்த தீவிரத்தை பார்த்துத்தான் பீட்டா அமைப்பினர் அவரை அணுகி அதன் தூதுவராக ஆக்கி விலங்குகள் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தினர். ‘பீட்டா’வில் சேர்ந்த பிறகு திரிஷா இன்னும் வேகமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா செயல்படுவது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பீட்டாவுக்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் போராடுவதுடன் அந்த அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ‘பீட்டா’ அமைப்பில் இருக்கும் திரிஷா இந்த பிரச்சினையில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ‘பீட்டா’ அமைப்பில் இருந்து வெளியேறும்படி அவரை வற்புறுத்துவதற்கும் பதில் அளிக்கவில்லை. மேலும் கர்ஜனை படப்பிடிப்பு கோவை அருகே நடைபெற்றது. இந்த படபிடிப்பிற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திரிஷா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பினார். பின்னர் தனது கண்டனத்தை வெளியிட்டார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.