ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து நடத்திய “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. திறந்தவெளி அரங்கில் நடந்த இந்த இசை நிகழ்வை ரசிக்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இசை நிகழ்ச்சி நடந்த திடல் முழுவதும் மக்கள் வெள்ளமாக இருந்தது.

சென்னை மக்களின் இசையான கானா பாடல்களுடன் ராக் மற்றும் ராப் இசையை கலந்து “ப்யூஷன்”(Fusion) வடிவத்தில் உருவாக்கப்பட்ட 20 பாடல்கள் முதல் முறையாக மேடையில் இசைக்கப்பட்டது. சென்னை கானா பாடகர்களுடன் மும்பையில் தாராவி பகுதியில் இருந்து வந்திருந்த ராப் இசைக்கலைஞர்கள் இணைந்து பாடிய பாடல்களை ரசிகர்கள் கைத்தட்டி ஆடிப்பாடி கொண்டாடினர்.

வழக்கமான இசைக்கச்சேரிகள் போல பொழுதுபோக்கு இசைக்கச்சேரியாக இல்லாமல் ஆப்பிரிக்க கறுப்பினக்கலைஞர்களின் பாடல் போல சமூக நீதியையும் சமத்துவத்திற்கான தேடலையும் தட்டி எழுப்பும் உணர்வுப்பாடல்களாக “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” பாடல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

மீனவர் பாடல், விவசாயிகள் பாடல், இட ஒதுக்கீடு பாடல், பிளாட் ஃபார்ம் பாடல், காதல் பாடல், ஆணவக்கொலை பாடல், கறிப்பாடல், ராப் இசையில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுப் பாடல், வட சென்னைப்பாடல்… என வெரைட்டியாக இருந்த பாடல்களால் ரசிகர்களால் உற்சாகம் அடைந்தனர். அனைத்து பாடல்களுக்கும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட சில பாடல்கள் நிகழ்ச்சி முடிவில் மீண்டும் பாடப்பட்டது.

மேடையில் இந்த நிகழ்ச்சியை நிகழ்த்திய அத்தனை கலைஞர்களும் சினிமா வெளிச்சமோ வேறு பாப்புலாரிட்டியோ இல்லாத கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலாளர்கள், சினிமா பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பா.இரஞ்சித்தின் நண்பரும் இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுன் கலந்துகொண்டு முழு நிகழ்ச்சியையும் கண்டுகளித்தார். நடிகர்கள் காளி வெங்கட், ஆர்.ஜே.ரமேஷ், கார்த்திக், டிங்கு, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், மீரா கதிரவன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, கரண் கார்க்கி, கீதா இளங்கோவன், மீனா சோமு, பேராசிரியர் செம்மலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ், முற்போக்கு மாணவர் கழகத்தின் பாரதி பிரபு, மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் சவீதா, மருத்துவர் எழிலன் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். பிரபலங்களும் ரசிகர்கள் போல மிக சாதாரணமாக ஆங்காங்கே நின்று ரசித்தனர். இன்னும் பெயர் குறிப்பிடாத பிரபலங்கள் பலர் உண்டு.

இசை நிகழ்ச்சியின் முடிவில் இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது,

“ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப உணர்வுப்பூர்வமான தருணம் இது. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்ளோ பிரமாண்டமான பெரிய வெற்றியாக இது அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னபேசுவதென்று தெரியவில்லை. எனக்கு வார்தை கிடைக்கவில்லை. கலைகளை அரசியல்படுத்த வேண்டும். கலைகளில் அரசியல் பேசவேண்டும் என்பதைத்தாண்டி நீங்கள் அரசியல்பட வேண்டும். அரசியல்பட்டால் மட்டுமே உன் நிலை மாறும்.

இந்த இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பெரிய உதவியாக இருந்த நீலம் பண்பாட்டு மையக் குழுவினர், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ், மும்பை தாராவி “டொபா டெலிக்ஸ்’ குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி.

முக்கியமான பால் ஜேக்கப் அண்ணாவிற்கு நன்றி. பால் ஜேக்கப் அண்ணன் தான் “சென்னை சங்கமம்” நிகழ்ச்சியை வடிவமைத்து கொடுத்தவர். அவரைப்போலவே பேருதவியாக இருந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை தயாரிப்பாளர் டென்மா, சந்தோஷ், அருண், லிஜீஷ், உதயா, ஜெனி இவர்களுடன் ஒளிப்பதிவு செய்த பிரதீப் குழுவினர், புகைப்படக்கலை குழுவினர் குணா, முத்து வைரவன் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றி. அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்”, என்றார்.

6 மணிக்கு தொடங்கி கொண்டாட்டம், கரகோஷத்துடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இசை நிகழ்ச்சி 9.30 மணி அளவில் பறை இசையுடன் நிறைவுற்றது.

இந்த நிகழ்ச்சி பொங்கல் திருநாளில் நியூஸ் செவன் தொலைக்காட்சியில்
வெளியாகிறது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்கள் இரண்டு பாகங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் விரைவில் வெளியிடப்படும். மேடையில் பாடிய வீடியோ அல்லாமல் தனி வீடியோ ஆல்பமாக இந்த இசை நிகழ்ச்சி வெளியாகும்.

சென்னையின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி மும்பை தாராவியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் நடைபெற உள்ளது.

“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினர்.

இசைவாணி (கானா பாடகர்),
குணா (கானா பாடகர்),
பாலச்சந்தர் (கானா பாடகர்),
முத்து (கானா பாடகர்),
தரணி (கானா பாடகர்),
தினேஷ்(கானா பாடகர்),
லோகன் (கானா பாடகர் / ராப்பர்),
செல்லமுத்து (கானா பாடகர் / பாடலாசிரியர்),
அறிவு (கானா பாடகர் / பாடலாசிரியர்),
ஸ்டோனி சைக்கோ (ராப்பர் / பாடலாசிரியர் – டொபாடெலிக்ஸ், மும்பை),
டோப் டேடி (ராப்பர் / பாடலாசிரியர் – டொபாடெலிக்ஸ், மும்பை),
இபு (ராப்பர் / பாடலாசிரியர் – டுபாக்கீஸ்),
அபிஷேக் (பீட் பாக்ஸர் – டொபாடெலிக்ஸ், மும்பை),
நந்தன் (பறை இசைக்கலைஞர்),
கௌதம் (சட்டி மேள இசைக்கலைஞர்),
சரத் (சட்டி மேளம், பறை இசைக்கலைஞர்),
சாஹிப் சிங் (கிடார் ப்ளேயர், குரங்கன்),
சௌந்தர்ராஜன் (டிரம்ஸ் ப்ளேயர், குரங்கன்),
டெம்னா (பேஸ், கம்போஸர், அரேஞ்சர், பேண்ட் லீடர் அண்ட் மியூசிக் புரொடியூசர், குரங்கன்)