சமுத்திரகனி நடிப்பில், பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்”

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
இம்மாதிரி ஒரு நல்ல படத்தைத் தயாரித்ததற்காக ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்கள் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லிஸ்டில் இடம் பிடிப்பார். மிக அழகான சூட்சமத்தைப் பிடித்துவிட்டார். அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான். சில பேர் மட்டும் தான் நேர்மையான நல்ல விசயத்தைப் பேசப் பொருத்தமாக இருப்பார்கள். சமுத்திரகனி அதற்குப் பொருத்தமானவர். அவர் மிக நன்றாக நடித்துள்ளார். அடுத்ததாக பாரதிராஜா சார். அவர் ஒரு முறை சிவாஜி சாரிடம் தான் நடிக்க வந்ததாக சொன்ன போது, உங்க ஊரில் கண்ணாடியே இல்லையா? எனக்கேட்டதாகச் சொல்வார்கள். அவரே இப்போது இருந்திருந்தால் பாரதிராஜா சார் நடிப்பைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார். விஷால் சந்திரசேகர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தாருங்கள் நன்றி.

நடிகை வடிவுக்கரசி பேசியதாவது…
இப்படத்தைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன் என்றார். யாருக்கு அம்மா யாருக்கு பாட்டி என்று தான் கதை கேட்பேன், ஆனால் இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக்கேட்டேன். என் கேரக்டர் சின்னது தான் ஆனால் என் குரு பாராதிராஜா சாருக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம். சமுத்திரகனி சாரைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார். இந்தப்படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம். நேர்மையான நேர்மையோடு பார்த்துப் பாராட்டுங்கள் நன்றி.

கவிஞர் சொற்கோ பேசியதாவது…
இயக்குநர் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாட்டு வாய்ப்புத் தருவார். இந்தப்படத்திலும் தந்துள்ளார். இந்த மேடையில் இருப்பதே பெருமையாக உள்ளது. இந்தப்படத்தில் நடித்த சமுத்திரகனிக்கு கண்டிப்பாகத் தேசியவிருது கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தேசிய விருது கிடைக்கும். நான் எழுதிய பாடலுக்கும் தேசிய விருது கிடைக்கும். அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் சுகுமார் பேசியதாவது..
இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. இயக்குநர் நந்தா பெரிய சாமி படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் விக்ரமன் பேசியதாவது…
பொதுவாக மலையாளத்தில் நல்ல படம் வருகிறது எனச் சொல்வோம், ஆனால் தமிழில் இந்த வருடம் மிகச்சிறந்த படங்கள் வந்துள்ளது. வாழை, லப்பர்பந்து படங்களை விட இந்த திரு மாணிக்கம் படம் மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் நெகடிவ் இல்லை, நமக்கு என்னானது ஏதானது என்றே புரியாமல் வருவோம் அது தான் இப்படத்தின் வெற்றியாக இருக்கும். தமிழ் சினிமாவிம் சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தை நாம் கௌரவப்படுத்த வேண்டும். இயக்குநராக நந்தா பெரியசாமியை ஜெயிக்க வைக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் கணேஷ் பாபு பேசியதாவது…
சின்ன வயதில் நம்மைப் பெற்றோர் நேர்மையாக இருக்க வேண்டும் எனச் சொல்லி வளர்த்திருப்பார்கள், ஆனால் நாம் வளரும் போது மற்றவர்களைப் பார்க்கும் போது, நேர்மை தப்போ எனத் தோன்றும் ஆனால் நம்மால் நேர்மைமையை விட்டு வாழ முடியாது. நேர்மையாக இருப்பதுடைய சிறப்பை, நேர்மையாக இருந்து கிடைக்கும் செல்வம், மரியாதை, புகழ், வாழ்க்கை போதும் எனும் அருமையான விசயத்தைச் சொல்லியுள்ளது இந்தப்படம். இந்தியில் ஜெயித்து காட்டி விட்டார் நந்தா பெரிய சாமி. இந்தப்படம் மூலம் இங்கும் ஜெயிப்பார். கட்டபொம்மனைச் சொன்னால் சிவாஜி ஞாபகம் வரும் இனிமேல் நேர்மையானவன் என்று யாரவது சொன்னால் சமுத்திரகனி ஞாபகம் தான் வரும். அந்தளவு அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். நேர்மையைப் பேசும் இந்த படைப்பு கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். நன்றி.

தயாரிப்பாளர் ராஜா செந்தில் பேசியதாவது…
இந்தப்படத்தின் கதைக்கு முன் 20 கதைகள் கேட்டிருப்பேன், நந்தா பெரியசாமி சாரிடம் ஒரு ஹீரோயினுக்கு தான் கதை கேட்டேன். கொஞ்ச நேரத்தில் அழுது விட்டேன். உடனே ரவி சாரிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. உடனே ஒரே நாளில் படத்தை செட் செய்து விட்டோம். நேர்மையாக எல்லோரும் வாழ வேண்டும் எனும் விசயம் இப்படத்தில் உள்ளது. இப்படம் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…
இது மனதுக்கு மிக நெருக்கமான படம். இயக்குநர் நந்தா பெரியசாமியின் கதைகள் கருவில் உயிர் பெறும்போதே எனக்கு வந்துவிடும். ஒவ்வொரு கட்டத்திலும் கதை வளர வளரச் சொல்வார். நேரம் காலமில்லாமல் அவர் சொல்கிற காட்சியை அத்தனை விவரங்களோடு கேட்க அருமையாக இருக்கும். இந்தக்கதையை உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட கடின உழைப்பு பிரமிப்பானது. நேர்மை என்பது தானே அறம், நேர்மையாகத்தானே வாழ வேண்டும் ஆனால் அதைப் படமாக எடுத்துச் சொல்ல வேண்டிய, இடத்தில், நேர்மையாக இருப்பதையே கொண்டாட வேண்டும் என்கிற நிலையில் நாம் இருப்பது சோகம். நல்லவனுக்கு வாழ்க்கையை இல்லை எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் நேர்மையாக வாழ வேண்டிய அவசியத்தை, மனிதத்தைச் சொல்ல வருகிறது இந்தப்படைப்பு. இதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். நன்றி

நடிகர் ரவிமரியா பேசியதாவது…
நானும் நந்தாவும் நண்பர்கள், எல்லோரும் இங்கு படம் பார்த்துவிட்டுத் தான் பாராட்டிப் பேசுகிறார்கள். என்னைப் படம் பார்க்கக் கூப்பிட்ட போது, அமீரே படம் பார்த்து அழுது விட்டார் எனச் சொன்னான் நந்தா, அமீரே அழுது விட்டாரா? எனக்கேட்டேன். படம் பார்த்த பிறகு தான் புரிந்தது. இப்படைப்பிலிருந்த உண்மையும் நேர்மையும் தான் உங்களை அழ வைத்துள்ளது. நந்தா படம் பார்க்கும் எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டான். அவன் எழுத்து அத்தனை அற்புதமானது. இந்தப்படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. சமுத்திரகனி அட்வைஸ் பண்ற ஆள் என சொல்வீர்களே? அது இந்தப்படத்தில் இல்லை. ஆனால் படம் பார்க்கும் எல்லோரும் அடுத்தவருக்கு அட்வைஸ் செய்வீர்கள் அந்த நிலைமையை இப்படம் ஏற்படுத்தும். பாராதிராஜா சார் எமோசனை கொட்டி நடித்துள்ளார். வடிவுக்கரசி அம்மா வசனமே இல்லாமல் அற்புதமாக நடித்துள்ளார். நேர்மை தான் வெற்றியின் ரகசியம். இப்படத்திற்காக நேர்மையாக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இப்படத்தைப் பற்றி தூக்கத்தில் எழுதினால் கூட உங்களால் நேர்மைக்கு மாறாக எழுதிவிட முடியாது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் சரண் பேசியதாவது…
இந்தப்படத்தில் மிக அருமையான கதை இருக்கிறது. இந்தப்படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். நான் என்னுடைய ஒரு படத்தில் மிக அமைதியான கேடக்டருக்கு சமுத்திரகனி என்று தான் பெயர் வைத்தேன். காலம் பாருங்கள். இப்போது அவர் பிரபலமான வில்லன் ஆகிவிட்டார். இந்தப்படத்திலும் அவர் தான் வில்லன். படம் பாருங்கள் புரியும். இந்தப்படம் பார்த்து சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம். ஸ்கெட்ச் போட்டு வேலை செய்திருக்கிறார் நந்தா பெரியசாமி. அதை விட இந்தப்படத்தை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலும் ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்திருக்கிறார். பாராதிராஜா சாரிலிருந்து குட்டி குட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட அழகாகச் செய்துள்ளனர். முழு திருப்தி தந்த படம். கண்டிப்பாக இப்படம் மக்களின் மனங்களை வெல்லும். நன்றி