கைதுசெய்வதில் காட்டும் முனைப்பை தமிழக அரசு மக்கள் நலனுக்காக காட்டவில்லை – மு.க.ஸ்டாலின்

ஓ.என்.ஜி.சி.திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து அங்குள்ள மக்களிடையே பேசுகையில்,

விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் கேட்டபின்பே குத்தகை உரிமத்தை வழங்கியிருக்க வேண்டும். எண்ணெய் எடுக்கும் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில்தான் குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கதிராமங்கலம் போராட்டத்தில் பெண்கள் திரளாக கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஆட்சியிலுள்ள அதிமுக அரசு பேச்சுவார்தைக்கு அழைக்கவில்லை, அதிமுக அரசின் அவசரத்தால் குழாய்கள் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 போரையும் விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் முதல்வர் பேரவையில் பேசினார். அப்போது திமுகவின் எதிர்ப்பை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி அவராகவே வார்த்தையை திரும்ப பெற்றுக்கொண்டார். பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுகவின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொல்லவில்லை.

மாறாக கதிராமங்கலம் குறித்து முன்கூட்டியே தயாரித்த பதில்களை பேரவையில் முதல்வர் படித்தார். மக்கள் நலனுக்கு எதிரானது எனில் திமுக கொண்டுவந்திருந்தாலும் அதனை ரத்து செய்திருக்கவேண்டும். தமிழக அரசு இன்றோ, நாளையோ என ஊசலாடி கொண்டிருக்கிறது. கைதுசெய்வதில் காட்டும் முனைப்பை தமிழக அரசு மக்கள் நலனுக்காக காட்டவில்லை என்று கூறினார்.