அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா செயல்படுவதற்கு தடை கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நீடிக்க தடை விதிக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், சசிகலா அறிவுறுத்தலின் படி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், குடியரசுத்தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சசிகலாவை ஆலோசித்தாக கூறும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை சரியல்ல என்றும் தெரிவித்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனுவின் தன்மையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா செயல்படுவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவின் ஆலோசனையில் செயல்படுவதை தடை செய்யவும் மறுத்துவிட்டது. ஒரு அரசியல்வாதி தனக்கு பிடித்த யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை பெறலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.