அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு (14.2 கிலோ) மாதந்தோறும் 2 ரூபாய் (வாட் வரி தவிர) உயர்த்தும்படி மத்திய அரசு கூறியிருந்தது.  

இப்போது, மானியத்தை முற்றிலும் அகற்றும் வகையில், மாதந்தோறும் சிலிண்டருக்கான விலையை 2 ரூபாய்க்கு பதிலாக 4 ரூபாய் உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கபபட்டிருப்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார். ‘பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூலை 1, 2016 முதல் மாதந்தோறும் 2 ரூபாய் என்ற அளவில் விலையை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இப்போதுவரை எண்ணெய் நிறுவனங்கள் 10 முறை விலையை உயர்த்தி உள்ளது.

அதன்பின்னர் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி  வெளியிட்ட உத்தரவில், ஜூன் 1ஆம் தேதியில் இருந்து மாதந்தோறும் 4 ரூபாய் (வாட் வரி தவிர) உயர்த்த எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மானியம் முழுமையாக ரத்து ஆகும் வரை அல்லது மார்ச் 2018 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை மாதந்தோறும் விலையை உயர்த்திக் கொள்ளலாம்’ என்று மத்திய மந்திரி கூறினார். மானியவிலை சிலிண்டர்களைப் பொருத்தவரையில் டெல்லியில் கடந்த ஆண்டு ஒரு சிலிண்டர் ரூ.419.18 என்ற அளவில் இருந்தது.

பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.477.46 என்ற நிலையில் உள்ளது. மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.564 ஆக உள்ளது. சென்னையில் தற்போது மானியவிலை சிலிண்டர் விலை ரூ.465.56 ஆகவும் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.574.00 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.