விபத்துகளை குறைக்கவே அசல் ஓட்டுநர் உரிமம்

தமிழகத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கையில் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்கவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. செப்டம்பர் 6ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க தேவையில்லை என இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் சார்பில் கூறப்பட்டது. பின்னர் வந்த இந்த விசாரணையில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை இன்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், “மோட்டர் வாகன சட்டத்தில் ஏற்கனவே உள்ள விதிகள் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்துக்களை குறைக்கவே வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. மேலும் 2011 முதல் 2017 வரை மொத்தம் 32,000 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 9,881 பேர் இறந்துள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இதைத்தொடர்ந்து, அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் மறு ஓட்டுநர் உரிமம் கிடைப்பதில் சிரமம் ஏதும் இருக்காது என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் மறு ஓட்டுநர் உரிமம் கிடைக்க காவல்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.