நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ள ’The Mosquito Philosophy’
வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Mosquito Philosophy. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது. அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது.
இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவே தமிழ் சினிமாவின் முதல் “Mumblecore ” என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் “Dogme 95 ” கோட்பாடு இயக்கத்தின் தாக்கம் இப்படத்தில் பெருமளவில் உள்ளது. எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “The Mosquito Philosophy” யில் Retakes என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இணை தயாரிப்பாளருமான ஜதின் ஷங்கர் ராஜ், முன்னேற்பாடுகள் எதுவுமின்றி இருக்கும் சூழலையும் சுற்றுப்புற வெளிச்சங்களையும் மட்டுமே வைத்து இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். மேலும் படத்தின் முதன்மை நடிகர் சுரேஷ் மற்றும் இயக்குநர் ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் இப்படத்தின் கதை தெரியாது. இவ்வாறு பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் உள்ளடக்கியது கொசுவின் தத்துவம்.
விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற “லென்ஸ்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் இரண்டாவது படம் தான் “The Mosquito Philosophy”. இவர் தனது முதல் படத்திற்கு “சிறந்த அறிமுக இயக்குநர்” _க்கான கொல்லாபுடி சீனிவாஸ் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது Netflix-யில் உலகளவில் லென்ஸ் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
Netflix -யில் ஓடிக்கொண்டிருக்கும் “ஓடு ராஜா ஓடு” நகைச்சுவை திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெதின் ஷங்கர் ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் டேனி சார்ல்ஸ் ஆவார். கன்னட திரையுலகை சேர்ந்த ஐயோ ராமா படத்தின் பின்னணி இசை அமைத்துள்ளார்.
பிப்ரவரி 23ம் தேதி மதியம் 3 மணிக்கு சத்யம் சினிமாஸ் Seasons திரை அரங்கில் “The Mosquito Philosophy” திரையிடப்படவுள்ளது.