நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்டிரூந்த இடைக்காலத் தடையை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம்

33 அடி பொதுச்சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் கட்டுமானப் பணிகளுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவனின் அறிக்கையில் சாலை ஆக்கிரமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி இப்பகுதியின் சாலை வரைபடங்களை தாக்கல் செய்தது.

நடிகர் சங்கம் அருகில் தபால் நிலையம் செயல்பட்டு வந்ததாக தலைமை தபால் அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது புகாரை நிரூபிக்க மனுதாரர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கியும் அவர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டதாகத் தெரிவித்த நீதிபதிகள், இடைக் காலத் தடையை நீக்கி உத்தரவிட்டதோடு, விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.