ஜெய டி.வி அலுவலகம், டிடிவி தினகரன் இல்லம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அரசியல் உள்நோக்கத்துடனேயே சோதனை நடைபெறுவதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், டிடிவி தினகரன் இல்லம், ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான இடங்களில் இன்று காலை சுமாா் 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், சசிகலாவின் கணவா் நடராஜன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலா ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், வருமான வரித்துறை சோதனையில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன், ஜெயா டி.வி.யை கைப்பற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் வேலை என குற்றம் சாட்டியுள்ளார்.