இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நடிகை சம்யுக்தா, கருண் ராமன் மற்றும் வேலண்டினா மிஷ்ரா ஆகியோருடன் சேர்ந்து, ‘Mr, Miss & Mrs தமிழகம் 2022’ போட்டியை நடத்தவுள்ளது. இந்த நிலையில், இப்போட்டிக்கான மாபெரும் போட்டியாளர்கள் சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என 3 பிரிவினருக்கான இந்த மாபெரும் போட்டியாளர் தேர்வில், தமிழகம் முழுவதிலும்இருந்து 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது திறமைகளைக் காட்டி, மேடையில் அன்ன நடை போட்டனர். மேலும், இந்த நிகழ்வில், நடிகை சம்யுக்தா, சர்வதேச அழகிப்போட்டிக்கான தேசிய இயக்குநர் வேலண்டினா மிஷ்ரா மற்றும் நட்சத்திர ஃபேஷன் பயிற்றுநர் கருண் ராமன் ஆகியோர் நடுவர்களாகக் கலந்துகொண்டு போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர்.
இதில் தேர்வான போட்டியாளர்கள், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ‘Mr, Miss & Mrs தமிழகம் 2022’ போட்டியில் பங்கேற்க உள்ளனர். மேலும், இவ்விழாவில் கண்கவர் ஃபேஷன் ஷோவும் நடைபெற்றது. இதில், நடிகையும், மிஸ் சூப்பர் குலோப் 2019 அழகிப்போட்டி வெற்றியாளருமான அக்ஷரா ரெட்டி மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் நட்சத்திர மாடல்களாக கலந்து கொண்டு அசத்தினர்.