தமிழக அரசு தான் மெர்சல் திரைப்படம் வெளி வர காரணம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்தாண்டு முதல் உமறுப்புலவர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விழாவிற்கு கோட்டாட்சியர் அனிதா தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜீ, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர் ஆகியோர் கலந்து உமறுப்புலவர் மணிமண்டபத்தில் அவரது மசூதியில் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில், இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு முதல் உமறுப்புலவர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களில் சீறாப்புராணம் மீண்டும் இடம் பெற கோரிக்கை வைத்தனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மெர்சல் திரைப்படம் திரையரங்கில் ஓடுவதற்கு தமிழகரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம், அதற்கு நடிகர் விஜய், அதன் இயக்குநர் அட்லி மற்றும் அந்த குழுவினர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.அதே போன்று திரைப்படத்துறையினர் வைத்த கேளிக்கை வரிகுறைப்பு செய்ய வேண்டும், அப்போது தான் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கேளிக்கை வரியை குறைத்தது. அதற்கும் திரைத்துறையினர் நன்றி தெரிவித்தனர். இதற்கும் விஜய் நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது மெர்சல் பட பிரச்சினை குறித்து தெரிவித்தார்.இதனை தொடர்ந்து தமிழக அரசு உதவி செய்ததை தொடர்ந்து மெர்சல் திரைப்படம் வெளியானது.இப்போதுள்ள பிரச்சினை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தான். இதற்கும் தமிழக அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, மத்தியரசு கட்டுபாட்டில் தணிக்கை குழுவினை தான் அணுகவேண்டும் என்றார்.