தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையர் நஜிம்ஜைதி ஆர்.கே.நகர் தேர்தலில் முறைகேடு நடந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பது பாராட்டத்தக்கது. 2016ஆம் ஆண்டு இதே போல் தேர்தல் நடத்தி இருந்தால் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் டெபாசிட் பெற முடியாது.  இனிவரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை தான் ஏற்படும்.

இரண்டு அணியினரும் ஒரு அணியாக இருந்து ஆட்சி செய்தபோது மக்களுக்கும், மீனவர்களுக்கும் எந்தவித வளர்ச்சி பணிகளையும் செய்து கொடுக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரண்டு அணிகளாக நிற்கின்றனர். ஒரு அணி பெரா மாபியா டி.டி.வி. தினகரன் அணி. 2-வது அணி மணல் மாபியா சேகர் ரெட்டி ஓ.பி.எஸ். அணி. ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பம் காரணம் என்று சொல்லும் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களும் வாய் திறக்கவில்லை. அவர் முதல்- அமைச்சராக இருந்த 64 நாட்களும் அதைப்பற்றி பேசவில்லை.

2 அணிகளும் ஒன்றாக இருந்தபோது நாட்டு மக்களையும், மீனவர்களையும் பற்றி சிந்திக்காமல் கொள்ளையடிப்பதும் லஞ்சம் ஊழலில் ஈடுபடுவதுமாக இருந்தனர். இப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். நாட்டில் மீனவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த போது ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? முதல்- அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ளதான் அக்கறை செலுத்தினார்.  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் முழுமையாக வெற்றி கண்டனர். போராட்டத்தின்போது அவர்களை கலைக்க தடியடி நடத்தியபோது சிதறி ஓடி ஐஸ்அவுஸ் பகுதியில் தஞ்சம் புகுந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது மீனவ தாய்மார்கள்தான்.

ஆனால் அடைக்கலம் கொடுத்தவர்கள் மீதே தடியடி நடத்தி பல வீடுகளையும் மீன் மார்க்கெட்டையும் எரித்ததும் போலீஸ்தான். அது மட்டுமல்ல, பெண் போலீஸ் அதிகாரியே ஆட்டோக்களுக்கும், குடிசைகளுக்கும் தீ வைக்கிறார். 
இதை வாட்ஸ்-அப் மூலம் அனைவரும் பார்த்தனர். அப்போது முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். கடலில் ஆயில் கலந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் கஷ்டப்பட்டனர். அதனால் பலருக்கு தொற்றுநோய் வந்ததாகவும் எடுத்து கூறினார்கள். இப்போது உத்தமர் வேடம் போட்டுக்கொண்டு ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் ஆர்.கே.நகரில் வலம் வருகின்றனர். அ.தி.மு.க.வின் 6 வருட ஆட்சி காலத்தில் மக்கள் பிரச்சனைகள் ஏதாவது தீர்க்கப்பட்டுள்ளதா?

அ.தி.மு.க. ஆட்சியில் 2-வது இடத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போதும், அவரது மறைவுக்கு பின்பும் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் என்ன சாதித்தார். பொதுத்தேர்தலுக்கு தான் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால் இப்போது ஆர்.கே.நகர் தொகுதிக்காக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அ.தி.மு.க.வின் 2011ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை, 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதாவது கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டதா? தயவு செய்து சிந்தித்து பார்க்க வேண்டும். 6 வருடம் ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் நிறைவேற்றாமல் இருந்து விட்டு இப்போது ஆட்சியின் சாதனைகளை சொல்லாமல் மீண்டும் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்.

இதனால் எதையும் செய்யவில்லை என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். ஆட்சியில் மட்டுமல்ல, மாநகராட்சியிலும் அவர்கள்தான் மேயர் கவுன்சிலராக இருந்தனர். இவர்கள் ஆர்.கே.நகருக்கு கழிவுநீர், குடிநீர் வசதிகளை கூட செய்து கொடுக்கவில்லை, ஓ.பன்னீர்செல்வம் வார்டு வாரியாக வாக்குறுதி கொடுத்து வருகிறார். அதை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதற்காக தி.மு.க. உடனடியாக ஆட்சிக்கு வந்துவிட துடிக்கவில்லை. நாங்கள் நினைத்தால் ஒரே நிமிடத்தில் ஆட்சிக்கு வந்து விடலாம். ஆனால் தலைவர் கலைஞர் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. மக்களை சந்தித்து மக்கள் மூலமாக ஆட்சிக்கு வரவேண்டும்.

அப்போதுதான் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஓ.பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் சேர்ந்துதான் இரட்டை இலை சின்னத்தை முடக்கியதாக டி.டி.வி.தினகரன் கூறுகிறார். அவருக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. ஸ்டாலினும், தினகரனும் சேர்ந்துதான் அ.தி.மு.க.வை பிரித்து விட்டனர் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று சிறையில் உள்ளார். டி.டி.வி.தினகரன் எப்போது வேண்டுமானாலும் சிறை செல்லும் நிலையில் உள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா , ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும். அப்போது என்ன நடந்தது என்ற உண்மை வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.