முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பை அழைத்தார். அணிகள் இணைப்பு பற்றியும், ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் அளித்த பேட்டியில், “ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஜெயலலிதா பெற்ற சிகிச்சை தொடர்பாக விசாரணை செய்து அரசுக்கு விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். விசாரணை கமிஷனுக்கான நீதிபதி யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ஜெயலலிதாவின் சாதனைகளையும் சிறப்புகளையும் கூறும் வகையில், அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படும்” என்று கூறினார்.