மோடியால்தான் வாடிவாசல் திறக்கும் என, தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் தங்களது உணர்வுகளை இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக கூடி பண்பாட்டிற்கும் ஆதரவாக களமிறங்கி இருக்கிறது. தமிழ் பண்பாட்டு உணர்வோடு இறங்கியவர்களை தலை வணங்கி வரவேற்கிறோம். காரணம் சுயநலமில்லாமல் தங்களை வருத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக என்னை விமர்சிக்கிறார்கள், அதைப்பற்றி கவலைப்படவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை பாரதிய ஜனதா கட்சி ஓயாது. ஒவ்வொரு நாளும் தொய்வில்லாது பா.ஜனதா கட்சி போராடி வருகிறது என்பதை தமிழக மக்களுக்கு கூறுகிறோம். அகில இந்திய தலைமை உட்பட இதை பதிவு செய்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்போம் என கூறுவது அதாவது மீட்டெடுக்கும் வகையில் தொலைத்தது யார்? ஜெய்ராம் ரமேஷ் காளைகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்கிய போது என்ன செய்தீர்கள்? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசரச் சட்டம் கொண்டு வர வாய்ப்பில்லை. அகில இந்திய தலைமையோடு பேசியிருக்கிறோம். 20-ந்தேதி 12 மணிக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களோடு இணைந்து டெல்லி சென்று தலைவர்களை, சுற்றுச்சூழல் அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். எங்களை விமர்சிப்பவர்களை புறந்தள்ளுகிறோம், பா.ஜனதா கட்சியின் முயற்சியில் உண்மையும் சத்தியமும் இருக்கிறது. மாணவர்களை கேட்டுக் கொள்வது உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். மாணவர்கள் பா.ஜனதா கட்சி மீது வீசுகிற கணைகளை ஏற்றுக் கொள்கிறோம், நம்பிக்கையோடு காத்திருங்கள். தமிழக அரசுக்கு விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் அடக்குமுறை வேண்டாம் அணுகுமுறையில் மாற்றம் வேண்டாம், வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும், கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். நாங்கள் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தாமதமாக வருவதற்கு மத்திய அரசை குறை கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.