அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்காவில் உள்ள பென்சில்வானியா மாகாணம், பிலாடெல்பியா நகரில் அமெரிக்கா வாழும் தமிழர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்ட கூட்டம் விஸ்வகணபதி, செந்தில்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கழக தகவல் தொழில் நுட்பப்பிரிவு முன்னாள் இணைசெயலாளர் கோவை சத்யன் கலந்து கொண்ட கூட்டத்தில் கழக பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நடத்தி கொண்டிருக்கும் தர்மயுத்தத்தை ஆதரித்தும், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோவை சத்யன் தலைமையில் தகவல் தொழில் நுட்பப் பிரிவினரின் கூட்டம் நடைபெற்றது. புரட்சி தலைவி அம்மா அணிக்கு பக்க பலமாக தீவிரமாக கழகப் பணியாற்றி கழக பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.