பிரச்னைகளின் மொத்த வடிவமாக உருவாகி வருகிறது காங்கிரஸ். இந்நிலையில் காங்கிரஸ் பொது க்குழுவில் ராகுல்காந்தி, சானியாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும்அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரசின் அடுத்த தலைவராக பதவியேற்க உள்ள ராகுல் காந்தியோ முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் நீண்ட நேரம் ஆலோசனையை நடத்தி இருக்கிறார். மேலும், குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து நேரடியாக ராகுல் காந்தி கருத்துக்களை கேட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்திற்கான புதிய தலைவர்கள் பட்டியலில் இளங்கோவன், குஷ்பு, அழகிரி, செல்வக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு நேரடியான எதிர்கட்சியான பாஜவிற்கு தமிழக மாநில தலைவராக தமிழிசை இருப்பதால் தமிழக காங்கிரசுக்கு குஷ்புவை தலைவராக நியமிக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குஷ்புவிடம் கட்சி மேலிடம் கேட்டபோது கட்சி என்ன பணி கொடுத்தாலும் அதை செய்ய தயார் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முன்னாள் தலைவர் இளங்கோவன் மறுபடியும் தலைவராக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதேபோல் இளங்கோவனுக்கு தலைவர் பதவி வழங்க ப.சிதம்பரமும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். இளங்கோவனுக்கு பதவி வழங்காத பட்சத்தில் தனது ஆதரவாளரான கே.எஸ்.அழகிரிக்கு தலைவர் பதவி வழங்கலாம் என்ற கருத்தும் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூரும் ராகுலுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர். அதேபோல் செல்வகுமாரும் டெல்லி தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். எனவே இவர்களில் யாரை நியமிக்கலாம் என்று மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிப்பதில் டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதால் திருநாவுக்கரசரும், அவரால் பல்வேறு பதவிக்கு வந்தவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.