தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடந்த சில தினங்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை அகற்ற, அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி பவள விழாவிற்காக சென்னை வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர். அதிகாரிகளையும் சந்தித்து பேசிய மோடி, ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இதுகுறித்து பேசிய முதல்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து விவரித்ததாகவும், அனைத்து உதவிகளையும் செய்ய பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு, ரூ.1500 கோடி நிதியுதவி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். மோடி வருவதை அறிந்த திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை விரைந்தார். பிரதமர் வரும்போது, வாசலில் நின்று பொன்னாடை போர்த்தி அவரை ஸ்டாலின் வரவேற்றார்.