தமிழக விவசாயிகள் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம்

விவசாய கடன் தள்ளுபடி, பயிர் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 2 மாத காலமாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாடைகட்டி போராட்டம், தலைகீழாக நிற்கும் போராட்டம் என போராட்டங்களை நடத்தி வந்த அவர்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன.  போராட்டத்தின் உச்சகட்டமாக மனித மலத்தை உண்ணும் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

ஆனால் தற்போது வரை அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருந்த போதும் மனம் தளராத விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லம் முன்பாக சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். விவசாயிகள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது.