உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான் ஒருநாள் கணக்கு. அவர்கள் காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் மாலை 6 மணிக்குள் அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிடவேண்டும். அப்படி யாராவது 6 மணிக்கு மேல் வெளியே சுற்றித் திரிந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள். இப்படியான மர்மங்கள் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான் நாயகன் ஜெகபதி பாபு. இவர் ஐ.ஏ.எஸ். படிப்பு முடித்துவிட்டு அந்த ஊருக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கிறார். ஆனால், இவர் படித்து முடித்தவுடன் எதிர்பாராதவிதமாக இறந்துபோகிறார். நிறைவேறாத ஆசைகளுடன் இவர் இறந்துபோன பிறகுதான் அந்த ஊரில் மாலை 6 மணிக்கு மேல் இறக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இதனால் கிராம மக்களின் சந்தேகம் இவர்கூடவே வலம் வரும் நாயகி காயத்ரி ஐயர் மேல் விழுகிறது. உண்மையில், இந்த சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம்? ஜெகபதிபாபு உண்மையில் இறந்துவிட்டாரா? என்பதை பிற்பாதியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். படத்தின் நாயகன் ஜெகபதி பாபுதான் படத்தில் இவரது முகத்தை வெறும் 15 நிமிடங்கள்தான் பார்க்க முடிகிறது. மற்றபடி, இவரது முகத்தை பார்க்கமுடியவில்லை. அதனால், இவரை நம்பி போனவர்களுக்கு படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்தான். நாயகி காயத்ரி ஐயர் படத்தின் முக்கால் பாகம் நிறைந்திருக்கிறார். கதைப்படி இவர் கிராமத்து பெண். ஆனால், படம் முழுக்க கிளாமர் உடையிலேயே இயக்குனர் வலம்வர வைத்திருப்பது ஏனோ தெரியவில்லை. வில்லனாக வரும் பள்ளிரெட்டி புருதிராஜ் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் பலவீனமானவர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. ரொம்பவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் லிங்காத். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? என்றால் சந்தேகமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது. ரவி வர்மாவின் இசையிலும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. லேகா ரத்னகுமாரின் பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். பிரபா கரணின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.