லண்டனை சேர்ந்த 7 வயது சிறுமியான கோலெ பிரிட்ஜ்வாட்டர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் வேலை வழங்குமாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் கடிதத்திற்கு பதில் கிடைக்காது என்றிருந்த கோலெவிற்கு சுந்தர் பிச்சை பதில் அளித்துள்ளார். கோலெவிற்கு சுந்தர் பிச்சை அளித்துள்ள பதிலில், ‘உன் கனவைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும். இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்ததும் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர முறையாக விண்ணப்பிக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார். கூகுள் தலைவருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கோலெ பிரிட்ஜ்வாட்டர் குறிப்பிட்டுள்ளதாவது,
என் பெயர் கோலெ, நான் வளரும் போது கூகுளில் வேலை செய்ய விரும்புகிறேன். இதோடு நான் சாக்லேட் ஃபேக்ட்ரியில் பணிபுரியவும், ஒலிம்பிக்ஸ்-ல் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவும் ஆசை கொண்டுள்ளேன். நான் ஒவ்வொரு சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறேன். கூகுளில் பணியாற்றும் போது பீன் பேக்களில் உட்கார்வது, சறுக்கிச்சென்று விளையாடுவது மற்றும் கோ கார்டிங் போன்றவற்றில் ஈடுபட முடியும் என்று என் தந்தை தெரிவித்தார். எனக்கு கம்ப்யூட்டர்களையும் பிடிக்கும், என்னிடம் டேப்லெட் ஒன்று உள்ளது. டேப்லெட்டில் நான் கேம்களை விளையாடுவேன், அதில் சதுர வடிவில் இருக்கும் ரோபோக்களை மேலும், கீழுமாக வைத்து விளையாடுவேன். கம்ப்யூட்டர் படிப்பது எனக்கு நல்லது என்று என் அப்பா தெரிவித்துள்ளார். அவர் எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது எனக்கு ஏழு வயதாகிறது மேலும் எனது ஆசிரியர்கள் நான் வகுப்பில் சிறந்து செயல்படுவதாக என பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அனைத்து பாடங்களிலும் சிறப்பாக படிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நான் இதே போல் நன்கு படித்தால் ஒரு நாள் கூகுளில் எனக்கு வேலை கிடைக்கும் என என் தந்தை தெரிவித்துள்ளார். என் தங்கை ஹோலீயும் திறமையானவள், அவளுக்கு 5 வயதாகிறது. ஹோலீக்கு பொம்மைகளுடன் விளையாடுவது மற்றும் ஆடை அணிந்து கொள்வது பிடிக்கும். என் தந்தை உங்களுக்கு கடிதம் எழுதி கூகுளில் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவித்தார். உண்மையில் வேலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் கடிதம் எழுதுவது இப்போதைக்கு போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
என் கடிதத்தை படித்தமைக்கு நன்றி. நான் எழுதிய இரண்டாவது கடிதம் இது. எனது முதல் கடிதத்தை என் தந்தைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல எழுதினேன். குட் பை.
கோலெ பிரிட்ஜ்வாட்டர், வயது 7.
இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் கடிதத்திற்கு சுந்தர் பிச்சை எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த கடிதம் எழுதியமைக்கு நன்றி. உனக்கு ரோபோக்கள், கம்ப்யூட்டர்களை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து தொடர்ந்து படிப்பாய் என நம்புகிறேன். உனது கனவு மற்றும் இலக்குகளை மனதில் வைத்து கடினமாக உழைத்தால் நீ மனதில் நினைத்தது அனைத்தும் – கூகுளில் பணியாற்றுவதில் இருந்து ஒலிம்பிக்ஸ்-ல் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வது வரை அனைத்தையும் செய்ய முடியும். பள்ளி படிப்பை முடித்த பின் கூகுளில் பணியில் சேர உனது விண்ணப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பேன். உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.