சுந்தர்.சி ஒரு நம்பிக்கை துரோகி என காமெடி நடிகர் வேல்முருகன், இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி மீது போலீசில் மோசடிப் புகார் அளித்துள்ளார். நடிகர் ரஞ்சித், நடிகை ப்ரியா ராமன் நடிப்பில் சில வருடங்களுக்கு வெளிவந்த நேசம் புதிது படத்தை இயக்கியவர் வேல்முருகன். பிறகு அவர், பல படங்களில் வடிவேலு காம்பினேஷனில் காமெடியனாக நடித்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன், இயக்குநரும்-நடிகருமான சுந்தர்.சி, நந்தினி தொடரின் கதையை பெற்றுக்கொண்டு பணம் தர மறுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்து திரும்பிய வேல்முருகன் கூறியதாவது,
இயக்குநராக இருந்த நான் தற்போது காமெடி நடிகனாக மாறியுள்ளேன். நான், வரலாற்றுப் பின்னணியில் ஒரு சரித்திரக் கதையை எழுதி அதை எனது நண்பரான சுந்தர்.சியிடம் சொன்னேன். கதையைக் கேட்ட அவர், அதை தொலைக்காட்சித் தொடராக தயாரிக்கப் போவதாக கூறினார். கதைக்கு ரூ.50 லட்சமும், திரைக்கதை எழுதுவதற்கு மாதம் தோறும் ரூ.1 லட்சமும் தருவதாகக் கூறினார். ஆனால், பேசியபடி அவர் நடந்துகொள்ளவில்லை. 15 வருட நட்பை நம்பி கதையைக் கொடுத்த எனக்கு, அவர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார் என்றார் வேல் முருகன்