இரண்டு சிறுமிகள் கொடுங்கையூரில் நேற்று மழையால் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் பலியாகியுள்ளனர். இதற்கு கமல் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் விஷாலும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எப்போதெல்லாம் இயற்கை சீற்றங்களான கனமழை, புயல், வெள்ளம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மின்சாரம் தாக்கி அப்பாவிகள் பலியாகின்றனர். பேரிடர் காலங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வறட்சியின்போது விவசாயிகள் பலியாகிறார்கள். அது தொடர்கதையாகி விட்டது. மழை பெய்தாலும் அப்பாவி மக்கள் தான் பலியாகின்றனர்.
இதுவும் தொடர்கதையாகி விட்டது. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இந்த நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோமா இல்லை அப்பாவிகளை தொடர்ந்து பலி கொடுக்கப் போகிறோமா? இன்னும் சென்னை மாநகரம் சரியான கட்டமைப்பு வசதியை பெறவில்லை என்பதைத் தான் இந்த மரணங்கள் காட்டுகின்றன.
இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால் சென்னைக்கு மழை, வெள்ளத்தை தாங்கும் திறன் இல்லை என்றுதான் கூறவேண்டும். அரசு நிர்வாகத்தின் தவறுக்கு இன்னும் எத்தனை அப்பாவி மக்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? சிறுமிகள் உயிரிழந்தது நிர்வாகத் தவறு அல்ல; குற்றம். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.