சென்னை கிண்டி மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நீட் தேர்வை விலக்கக் கோரி இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி போராட்டம் செய்த மாணவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர். மாணவர்களை அப்புறப்படுத்திய பின், பொது மக்களுக்கு ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, சென்னை கிண்டியின் கத்திப்பாரா பாலம் அருகே நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இவர்களின் இந்த போராட்டம் காரணமாக, கிண்டி முதல் சைதாப்பேட்டை வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சி செய்கையில், தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால், மாணவர்களை குண்டுக்கட்டையாக போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தமிழகத்தில் பல பகுதியில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில், நிறைய கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதிலும், கோவை அரசு கல்லூரியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் போலீசார் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.