சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கைமாறியதாக செய்திகள் வெளியாகின. இதற்கான ஆதாரம் ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. கடந்த 2 நாட்களாக இந்த பிரச்சனை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். ஆனால் சபாநாயகர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. நேற்றைய தினம் நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு சபாநாயகர் ஆதாரம் இல்லாமல் எந்த பொருள் பற்றியும் சபையில் விவாதிக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.
எனவே இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கைமாறியதற்கான ஆதாரங்கள் அடங்கிய சி.டி.யை சபாநாயகரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்தோம். (கையில் இருந்த சி.டி.யை பத்திரிகையாளர்களிடம் காட்டினார். இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. அதை இப்பொழுதே தர தயாராக இருக்கிறோம். எனவே பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டோம். ஆனால் சபாநாயகர் ஆதாரத்தை சபையில் கொடுக்க கூடாது. எனது அறையில் கொண்டு வந்துதான் கொடுக்க வேண்டும் என்று கூறினார். நாங்கள் அதற்கும் ஒப்புக்கொண்டோம். ஆனால் இந்த உரையாடல் முழுவதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். ஆனால் எங்கள் கட்சி துணைத் தலைவர் துரை முருகன் சபையில் ஆதாரத்தை ஏற்காவிட்டாலும் அறையில் கொண்டு வந்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி விட்டோம்.
எனவே இந்த சாதாரண உரையாடலை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியதில்லை என்று கூறினார். இதையடுத்து அந்த உரையாடல் அவைக்குறிப்பில் இருக்கும் என்று சபாநாயகர் கூறினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ஆதாரத்தை அவர்கள் தந்தார்கள் என்பது அவைக் குறிப்பில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று சொல்ல, உடனே சபாநாயகர் எனது அறையில் வைத்து அதனை பார்த்து விட்டு அதன் பிறகுதான் அது ஆதாரமா? இல்லையா? என்பதை முடிவு செய்வேன் என்றார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் உரையாடல் முழுவதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். எனவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். ஆதாரம் என்ற வார்த்தையே அவைக்குறிப்பில் இடம்பெறக் கூடாது என்று அவர்கள் சொல்வதால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கைமாறியது உறுதியாகி விட்டது. இந்த அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் துரைமுருகன் கூறும்போது, “சபாநாயகர் மாற்றி மாற்றி பேசுகிறார். முதலில் சபையில் ஆதாரத்தை தரக்கூடாது. என் அறையில் கொண்டு தர வேண்டும் என்றார். சரி என்று நாங்கள் ஒப்புக் கொண்டோம். அத்துடன் பிரச்சனை முடிந்து விட்டது. அமைச்சர் ஜெயக்குமார் குறுக்கிட்டதும் ஆதாரம் என்ற வார்த்தையே இடம் பெறக்கூடாது என்பதற்காக அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறார். சபாநாயகரின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது” என்றார்.