சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராவார் – மு.க.ஸ்டாலின்

திருச்சியில் இன்று நடந்த கே.என்.நேரு எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு சென்னை புறப்படும் முன்பு திருச்சி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு ஓட்டு தான் போட்டார்கள். ஆனால் தற்போது அவர்கள் 4-வது முதல்வரை சந்திக்க போகிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது. நடராஜன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளிக்க போவதாகவும் கூறப்படுகிறது. உண்மையிலேயே நடராஜன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்ந்து தள்ளி போவதற்கு அ.தி.மு.க.வின் சதியே காரணம். தமிழகத்தில் முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டி போடுவது கேலிக் கூத்தாக உள்ளது. ஜெயலலிதா, சசிகலா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அடுத்த வாரம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தீர்ப்புக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.