இலங்கை – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்திருந்தது. சண்டிமல் 86 ரன்னுடனும், ஹெராத் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெராத் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த லக்மல் சண்டிமலுக்கு உறுதுணையாக இருந்தார். இதனால், சண்டிமல் சதம் அடித்ததுடன் 138 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். லக்மல் 35 ரன்கள் சேர்க்க, இலங்கை அணி 338 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. பின்னர் வங்காள தேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
வங்காள தேச அணியின் ஸ்கோர் 95 ரன்னாக இருக்கும்போது தமீம் இக்பால் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து இம்ருல் கெய்ஸ் களம் இறங்கினார். அரைசதம் அடித்த விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் சவுமியா சர்க்கார் 61 ரன்னில் போல்டாகி வெளியேறினார். தற்போது வரை வங்காள தேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.