கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைத்த தரணி ரட்ச மகா யாகத்தை தொடர்ந்து நடத்த பிரதமரும், இந்து அமைப்புகளும் முன்வரவில்லை – சூரியன் நம்பூதிரி சுவாமிகள் குற்றச்சாட்டு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் ‘மருந்தும், மந்திரமும்’ பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் செய்தால், இதன் பாதிப்பிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுதலை பெறலாம். ஆனால் இதனை நடத்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், பாரத பிரதமரும், ஹிந்து அமைப்புகளும் முன்வரவில்லை என சூரியன் நம்பூதிரி சுவாமிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை முழுவதுமாக குறைக்க தரணி ரட்ச மகா யாகத்தை மூன்று கட்டங்களாக நடத்த வேண்டும். முதல் கட்டம் நிறைவடைந்திருக்கும் நிலையில், இரண்டு மற்றும் மூன்றாவது கட்ட யாகத்தை நடத்த அனைவரும் முன்வந்து உதவி செய்ய வேண்டுமென சூரியன் நம்பூதிரி சுவாமிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது….

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இப்பாதிப்பு நீங்குவதற்கு வேதங்களில் குறிப்பாக அதர்வண வேதத்தில் ‘மருந்தும் மந்திரமும்’ என குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதாவது அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையில் தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் செய்தால், இதிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம். இந்த யாகத்தை 18 மாதங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது தவணை முறையிலோ செய்தால், இந்த பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட இயலும். இதனை தேவ பிரசன்னத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.

இந்த கொரோனா தொற்று பாதிப்பிற்கு இந்திராதி தேவர்களின் கோபமே காரணம் என்பதை தேவப்பிரசன்னம் மூலம் அறிந்து கொண்டோம்.பிறகு, அதற்கான பரிகார பூஜையாக இந்திராதி தேவர்களைச் சாந்தி படுத்த, தரணி ரக்ஷ மஹா யாகத்தை நடத்தத் திட்டமிட்டோம். இதற்காக கோடிக்கணக்கான சொத்துகளை உடைய இந்தியா முழுமைக்கும் உள்ள மடங்கள், ஹிந்து அமைப்புகள், பாரத பிரதமர், தமிழக முதல்வர் என மதம் சார்ந்த அரசியல் சார்ந்த மற்றும் முன்னணி தொழிலதிபர்களான அம்பானி, அதானி, டிவிஎஸ் குழுமம் என அனைவருக்கும் எங்கள் பீடத்தின் சார்பாகக் கடிதம் ஒன்றை எழுதி உதவியும் ஒத்துழைப்பும் கோரினோம்.

கொரோனா தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த கடந்த ஆண்டிலேயே இந்தக் கடிதத்தை எழுதினோம். ஆனால் இன்றுவரை இதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. 3,000 கோடி ரூபாய் செலவு செய்து அயோத்தியில் ராமருக்கு ஆலயம் கட்டுவதை விட, உலக மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்படும் இந்த யாகத்திற்கு ஹிந்து அமைப்புகள் மற்றும் மடங்கள் தாமாகவே முன் வந்து உதவியிருக்கலாம். ஆனால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் எந்த மடங்களும் இதுவரை இதற்கு நிதி உதவி அளிக்க முன்வரவில்லை. மடங்கள் மட்டுமல்ல இது தொடர்பாக ஹிந்து மக்களின் நன்மையை நாடுவதாக தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி கூட இதற்கு பதிலளிக்கவில்லை. அதே தருணத்தில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களாக திகழும் அம்பானி, அதானி, டிவிஎஸ் குழுமம் என அனைவருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதி உதவி கேட்டோம். அவர்களும் இதற்குப் பதிலளிக்கவில்லை.

தேவ பிரசன்னத்தின் படி ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று முதல்கட்ட தரணி ரக்ஷ மஹா யாகத்தை ஆண்டவனின் அருளாசியுடன் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ சூரியமங்கலம் அத்வைத வேத வித்யா பீடம் சார்பில், எங்களுடைய பீடத்தின் வளாகத்திலேயே பொதுமக்களின் நிதி உதவியுடன் தரணி ரக்ஷ மஹா யாகம் ஒன்றை உலக மக்களின் நன்மைக்காகத் தொடங்கினோம். இந்த யாகத்தை யூட்யூப் சேனல் மூலம் தொடர்ந்து நேரலையாக ஒளிப்பரப்பவும் செய்தோம். இந்த யாகத்திற்குத் தினமும் குறைந்தபட்சமாக 63 ஆயிரம் ரூபாய் செலவாகிறது அதிகபட்சமாக 90 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மிக குறைந்த அளவிலான சம்பாவணம் வழங்கி, 207 நாட்கள் யாகத்தைத் தொடர்ந்து நடத்தினோம். அதற்குமேல் தொடர்ந்து நடத்த இயலாததால் யாகத்தை இடைநிறுத்தம் செய்திருக்கிறோம்.

இந்த யாகத்தை நடத்திய போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துகொண்டே வந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமானதிலிருந்து, 20 ஆயிரமாகக் குறைந்தது. இது தரணி ரட்ச மஹா யாகத்தின் மூலம் கிடைத்த பலன் என்று உறுதியாகச் சொல்லலாம்.

தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இதனைக் குறைக்க வேண்டும் என்றால் தரணிரட்ச மஹா யாகத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த யாகத்தை நடத்த வேண்டும். அப்போது தேவர்களின் புனித பூமியான,வேதங்கள் பிறந்த இந்த இந்திய நாட்டிலிருந்து கொரோனாத் தொற்று என்ற மாய அசுர சக்தியை வீழ்த்தலாம். பதினெட்டு மாதங்கள் தொடர்ந்து நடத்த வேண்டிய தரணி ரட்ச மகா யாகத்தை நடத்த அனைவரும் உதவி செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து தடுப்பூசிகள் நம்மை பாதுகாத்தாலும் ‘மருந்தும் மந்திரமும்’ என்ற வேத தத்துவப் படி மந்திரம் என்ற யாகத்தை நடத்தினால் கொரோனா தொற்றுப் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.

இதனைத் தொடர்ந்து ஊடகவியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

‘’என் கணிப்புகள் தவறாது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொல்லிவிட்டேன்.

பல ஆண்டுகளுக்கு முன் நான் முன்னணி நாளிதழில் சோதிடம் தொடர்பான கட்டுரையை எழுதி வந்தேன். அப்போது ஒரு முறை காஞ்சி மஹாபெரியவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைப் பற்றி தேவபிரச்சன்னம் பார்த்தேன். அதில் அவருக்கு விரைவில் சிறைவாசம் கிடைக்கும் என்று வந்தது. இதை எழுதினேன். பிறகு காஞ்சி மடத்திலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. ஸ்ரீஜெயேந்திரரைச் சந்தித்து, பிரசன்னத்தில் தெரிந்ததைச் சொன்னேன். அவர்களும் முதலில் நம்ப மறுத்தார்கள். பிறகு நான் தேவ பிரச்சன்னத்தில் கண்டதைப் போல், அவருக்கு சிறைவாசம் கிடைத்தது. சிறைக்கு செல்ல குற்றவாளியாக இருக்கவேண்டும் என்ற விதி கிடையாது. என்றாலும் அவருக்கு சிறை வாசம் கிடைத்தது. அதன் பிறகு அதற்கான பரிகார பூஜைகள் நடத்தினோம்.

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கூட யாகம் பற்றிக் கடிதம் எழுதி, உதவி கேட்டேன். அங்கிருந்தும் பதில் வரவில்லை. நம்முடைய வீட்டில் இருப்பவர்களே சோறு போடவில்லை என்றால். பக்கத்து வீட்டு காரர் சோறு போடுவார் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்.?

கொரோனா தொற்றுப் பாதிப்பை குறைக்க தரணிரட்ச மஹாயாகம் செய்தால் பலன் கிடைக்கும் என்று தேவ பிரச்சன்னம் மூலம் கணித்து சொல்கிறேன். இதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஹிந்துத்துவா பற்றி எப்போதும் பேசும் பிரதமர் நரேந்திர மோடி கூட இவ்விசயத்தில் நம்பிக்கை வைத்து உதவவில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயன் கம்யூனிஸ்ட்வாதி என்பதாலும், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இறைநம்பிக்கையற்றவர் என்ற விசயம் தெரிய வந்ததாலும் இவ்விரண்டு முதல்வர்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உதவி கோரினோம். இதுவரை பதிலில்லை.

அதனால் தான் நாம் திரும்பவும் வலியுறுத்துகிறேன். கொரோனா தொற்று பாதிப்பைக் குறைக்க தேவ பிரசன்னத்தில் தெரிந்தது போல், தரணி ரட்ச மஹாயாகத்தை நடத்தவேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து நிதி உதவியும், ஆதரவும் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.