இன்று காலை முதல் சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் போக்குவரத்துறை மேலாண் இயக்குனர்கள், சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் துணை ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் பேருந்து இயக்கம் குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வெளியூர்களுக்கு செல்வோரின் வசதிக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் 5 முனையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு, அண்ணா நகர் மேற்கு, கே கே நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சனிட்டோரியம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து 2,275 பேருந்துகள் இயக்கப்படும். இவற்றோடு கூடுதலாக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு, மற்ற மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்த தகவல் போன்றவை கூட்டம் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.