அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், முதல்வர் பதவிக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததுடன், கட்சிப் பணியை கவனிப்பதற்காக டிடிவி தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணை பொதுச்செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார்.
பின்னர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக அவர் இன்று பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கூவத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னை சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும் கடத்தியதாக புகார் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் காஞ்சீபுரம் எஸ்.பி முத்தரசி மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.