கோவை வந்த மோடிக்கு கருப்புக் கொடி, பலர் கைது

112 அடி சிவன் சிலையை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். மோசடி பேர்வழியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்ச்சி வரக் கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், விசிக, விவசாயிகள் அமைப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தினார்கள். ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் 112 அடி உயரத்தில் சிவன் சிலை திறக்க திட்டமிடப்பட்டது.

அந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் செஞ்சிலுவை சங்கத்தின் அருகில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் இந்த கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.

இதில் தபெதிக, தமாகா, சிபிஐ, விசிக, விவசாயி அமைக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ஆதிவாசி இடங்களை அபகரித்து ஏமாற்றி வரும் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சி பிரதமர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை போன்ற தமிழகத்தின் உயிர் நாடி பிரச்சனைக்கெல்லாம் தமிழகம் வராத மோடி, இதற்கு மட்டும் ஏன் வர வேண்டும் என்று முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினார்கள்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கு. ராமகிருஷ்ணன், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.