சமூக விரோதிகள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டனர் – ரஜினிகாந்த்
சமூக விரோதிகள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டனர் என்றும், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் பேசினார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிப்படைந்தவர்களை ரஜினிகாந்த் நேரில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தூத்துக்குடி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்கள் இன்னும் அச்சத்தில் இருந்து வெளியே வரவில்லை. இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நடக்கவே கூடாது. நல்ல காரணத்திற்காக 100 நாள் போராட்டம் நடத்தினார்கள். ஆட்சியர் அலுவலகத்தை எரித்ததோ, குடியிருப்பு பகுதிகளை எரித்ததோ அவர்கள் கிடையது. விஷ கிருமிகள், சமூக விரோதிகள் அந்த கூட்டத்தில் நுழைந்திருக்கிறார்கள். அவர்களுடையே வேலை தான் இது. மக்கள் போராட்டம் நடத்தும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் இது தான் நடந்தது. இதுவும் ரத்தக்கரையோடு முடிந்திருக்கிறது.
இதை அரசாங்கம் தனது இரும்பு கரங்களை கொண்டு இந்த சமூக விரோதிகளை அடக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இது போன்ற சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். இப்போது இருக்கின்ற அரசு இந்த விஷயத்தில் ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு வந்துவிடும்.
இனியும் ஸ்டெர்லைட் நிறுவனம் கோர்ட்டிற்கு சென்றால் அவர்கள் மனிதர்களே இல்லை. நீதிமன்றத்திலும் மனிதர்கள் தான் இருக்கிறார்கள். நிச்சயமாக தவறுகள் ஜெயிக்காது. மனித சக்திதான் அனைத்தையும் விட பெரியது. அதற்கு முன்னால் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. அடிக்கடி போராட்டம் நடக்கிறது.
சிலர் நல்ல காரியங்களுக்காக போராடுகிறார்கள். சிலர் இதனை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள். போராட்டங்கள் எதற்கும் தீர்வு அல்ல. அனைத்திற்கும் நீதிமன்றத்தை தான் நாம் நாட வேண்டும். போராட்டங்கள் தொடர்ந்தால் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டிற்கு வராது. அப்போது வேலை வாய்ப்பு குறைந்துவிடும்” என்றார்.