பொருட்கள் வழங்காமல் எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ரே‌ஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

ரே‌ஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் கார்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான நவீன எலக்ட்ரானிக் கருவி அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் நிறுவப்பட்டுள்ளது. அந்த கருவியில் ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் முழு விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ரே‌ஷன் கார்டை கொண்டு வந்து பொருட்கள் வாங்கும்போது அதன் குடும்ப தலைவருக்கு பொருட்கள் வாங்கிய விபரம் அதற்கான தொகை குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது. ரே‌ஷன் கடை ஊழியர் பொருட்களுக்கான விவரத்தை அந்த கருவியில் பதிவு செய்தவுடன் தானாகவே பொருட்கள் வாங்கியது குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. நவீன கருவி மூலம் ரே‌ஷன் கடைகளில் அனைத்து பொருட்கள் வழங்கி வரும் இந்த நிலையிலும் ஒரு சில ஊழியர்கள் தைரியமாக முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.

பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வாங்கியதாக எஸ்.எம்.எஸ். செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது பொருட்கள் வாங்காத குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து அவர்கள் வழக்கமாக வாங்கும் ரே‌ஷன் பொருட்களை ஊழியர்கள் எடுத்து கள்ள மார்க்கெட்டில் விற்கின்றனர். இதுபற்றி உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த முறைகேடு தடுக்கப்படவில்லை. ஒரு சில குடும்பத்தில் ஒரு பொருளை மட்டும் வாங்கி செல்பவர் வாங்காத மற்ற பொருட்களையும் அவர்கள் வாங்கியதாக ‘தில்லுமுல்லு’ வேலையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, பொருட்கள் வழங்காத ரே‌ஷன் கார்டுகளுக்கு வழங்கியதாக எஸ்.எம்.எஸ். வந்தால் உணவுத்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

9980904040 என்ற செல்போனுக்கு “நான் பொருள் வாங்கவில்லை” என்று குறிப்பிட்டால் போதும். அவை ஆன்லைனில் சம்பந்தப்பட்ட உதவி கமி‌ஷனருக்கு எந்த கடை ஊழியர் என்ற முழு விவரத்துடன் தெரியும். அதன்பேரில் அவர் நடவடிக்கை எடுப்பார். முதல் முறையாக இந்த தவறை செய்தால் எச்சரித்தும் 2-வது முறையாக செய்தால் அபராதமும் தொடர்ந்து செய்வது உறுதி செய்யப்பட்டால் பணியில் இருந்து ‘டிஸ்மிஸ்’ நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.