‘கண்ணே கலைமானே’ படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியை தான் சாரும்

‘கண்ணே கலைமானே’ படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததில் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார். 
 
நடிகர் மற்ற தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “இந்த படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியை தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ  நேட்டிவிட்டி திரைப்படங்களை  பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் எப்போதும் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால்  அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள்  நம்மை கடத்தி விடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அளிக்கிறது” என்றார்.
 
மேலும் அவர் கூறும்போது, “ஆரம்பத்தில், சீனு ராமசாமி சார் எனக்கு வேறு ஒரு கதையை சொன்னார். அதில் என் கதாபாத்திரம் மிகவும் கட்டுமஸ்தான உடலமைப்பைக் கோரியது. அந்த தோற்றத்தை கொண்டு வர சுமாராக 4-5 மாதங்கள் ஆகும் என இருவருமே உணர்ந்தோம். என்னை விடவும் அதிகமாக, சீனு சார் எப்போதும் மிகவும் எளிதில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கலைஞர். மற்ற சில காரணங்களாலும் படத்தை சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்போது தான் அவர் எனக்கு கண்ணே கலைமானே கதையை சொன்னார். இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது. 
 
தமன்னா ஒரே டேக்கில் நடிக்க கூடிய நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளே இருந்தது. தமன்னா அதை மிக எளிதாக செய்தார். ஒருவேளை, அவர் ஏற்கனவே சீனு ராமசாமி படத்தில் நடித்ததனால் அவருக்கு எளிதாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பல காட்சிகளிலும் அவர் சிங்கிள் டேக்கில் நடித்ததை பார்த்து நான் மிகவும் வியப்படைந்தேன்” என்றார். 
 
“இந்த படத்தின் நாயகன் ஒரு கரிம  வேளாண்மையை நம்புகிற விவசாயி. அதை தாண்டி வெளியில் வரும் செய்திகள் போல இது விவசாயப் பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல. நல்ல மனதுடைய நேர்மையான  வாழ்க்கை வாழும் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பது பற்றிய படம். எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால் கண்ணே கலைமானே மனித உறவுகளை பற்றிய படம்” என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
 
ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.