அமெரிக்காவில் வசித்து வந்த ஐதராபாத் என்ஜினீயர் ஸ்ரீனிவாஸ் குச்சுப் போட்லா சுட்டு கொலை செய்யப்பட்டார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் ஒருவித இனவெறி சிலரிடம் ஏற்பட்டுள்ளது. இப்படி இனவெறிக்கு ஆளான முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் இந்தியனே வெளியேறு என்று கூறி ஸ்ரீனிவாசை சுட்டு கொன்றார். அவரது உடல் ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில், மனைவி சுனையனாவும் கலந்து கொண்டார்.
கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ள சுனையனா இனி அமெரிக்காவுக்கு திரும்ப முடியுமா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசுக்கு அமெரிக்காவில் தங்கி இருந்து வேலை பார்க்க கூடிய எச்1.பி விசா வழங்கப்பட்டு இருந்தது. அவரது மனைவி சுனையனாவுக்கு எச்.4 விசா வழங்கப்பட்டு இருந்தது. கணவர் வேலை பார்ப்பதால் அவரை சார்ந்தவர் என்ற முறையில் இந்த விசாவை அவருக்கு வழங்கி இருந்தனர். தற்போது டிரம்ப் கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை விதியின்படி எச்.4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்க முடியாது.
எனவே, சுனையனா அமெரிக்கா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சங்கத்தினர் கூறும்போது, சுனையனா அமெரிக்காவுக்கு வர முடியாது என்றாலும், அவருடைய கணவர் இங்கு சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதால் இதை காரணம் காட்டி கோர்ட்டு மூலம் உரிய உத்தரவுகள் பெறப்படும். அதன் மூலம் நிச்சயமாக அவரை அமெரிக்காவுக்கு வரவழைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம் என்று கூறினார்கள்.