திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜ் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஞானபிரகாசம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், ‘குறள் வழி கல்வி’ என திருக்குறளின் மேன்மையை பள்ளி எங்கும், மாணவர்களின் மனதில் விதைக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் திருச்சி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.