தமிழ் மக்கள் தினமும் கேட்கிற பாடலாக என் பாடல் இருப்பதில் பெருமைப்படுகிறேன் – பாடலாசிரியர் முருகன் மந்திரம் மகிழ்ச்சி

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சைரன். இந்தப் படத்தில் பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதிய, “அடி ஆத்தி” பாடல் ஹிட் பாடலாக மாறி இருக்கிறது. இது பற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறுகையில்,

ரொம்ப சந்தோஷமா இருக்கு. சைரன் படத்தின் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் சார், இந்தப் பாடலுக்கான சூழலை என்னிடம் சொல்லும் போதே, இது தமிழ் மக்களின் குடும்பப் பாடலாக மாறும்ணு தோணிச்சு. அதுவும் ஜீவி பிரகாஷ் ட்யூன் கேட்ட உடனே கண்டிப்பா ஹிட் தான்னு நெனைச்சேன். நெனைச்ச மாதிரியே பெரிய அளவில் பாடல் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது.

பூப்பெய்துதல் என்பது பெண்களின் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயம். அது ஒரு இயற்கை மாற்றம், வளர்ச்சி. அப்படி பெண்கள் வயதுக்கு வருவதை சொந்த பந்தங்கள் கூடி சந்தோஷமாகக் கொண்டாடுவது தமிழ் மக்களின் பண்பாட்டு வழக்கமாக இருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்திற்காக உருவானது தான் அடி ஆத்தி பாடல்.

சின்ன மொட்டு ஒண்ணு
பூத்து இப்போ
வெட்கப்படும் ஜோரு
வண்ணப் பொட்டு வச்சி
பூவும் வச்சி நிக்கிறதைப் பாரு
கூடி வாங்க பொண்ணுகளே
கொலவையை போட்டு ஆடுங்க
மாடி வீடு கட்டித் தரும்
மாப்பிள்ளை வேணும் தேடுங்க

இப்டி அழகான தொகையறாவுல தொடங்குற பாடல், அடுத்து வரும் பல்லவில கொண்டாட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போவும்., அங்கே இருந்து சரணம்… அது இன்னும் அடுத்த லெவலுக்குப் போகும்… மொத்தத்துல பாட்டு வரிகளும் இசையும் மகிழ்ச்சி உற்சாகம் கொண்டாட்டம்னு கலகலப்பா இருக்கும். அதான் இவ்ளோ பெரிய ஹிட் ஆகக் காரணம்.

பெண்கள் வயதுக்கு வரும் நிகழ்வுகளில் ஒலிக்கிற பாடல்களாக, “சின்னத் தம்பி” படத்தில் இடம் பெற்ற “அரைச்ச சந்தணம் மணக்கும் குங்குமம்” பாடலும், “காதல்” படத்தில் இடம் பெற்ற “தண்டட்டி கருப்பாயி” பாடலும் நிச்சயமா இருக்கும். இப்போ அந்த வரிசையில் “அடி ஆத்தி” பாடலும் சேர்ந்திருக்கு. அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். தமிழ் மக்கள் தினமும் கேட்கிற பாடலாக என் பாடல் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

ஜெயம் ரவி சார், அந்தோணி பாக்யராஜ் சார், ஜீவி பிரகாஷ்குமார் சார், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மேடம், இந்தப் பாடல் வாய்ப்புக்கு காரணமான அந்தோணி தாசன் அண்ணா, இந்தப் பாடலை பாடிய சிந்தூரி விஷால், அந்தோணிதாசன் அண்ணா, முகேஷ் அனைவருக்கும் பாடல் வெளியான உடனே கேட்டு ரசித்து உலகெங்கும் இருந்து பாராட்டிய நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள், விமர்சனத்தில் குறிப்பிட்டு பாராட்டிய ஊடக தோழமைகள் அனைவருக்கும் என் அன்பின் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார், முருகன் மந்திரம்.

*பாடல் வரிகள் வீடியோ:* https://www.youtube.com/watch?v=v-KRdd4DAzQ
*பாடல் வீடியோ:* https://www.youtube.com/watch?v=YeyitFIzWEU

*பாடல் வரிகள்:*

தொகையறா:

சின்ன மொட்டு ஒண்ணு பூத்து இப்ப
வெட்கப் படும் ஜோரு
வண்ணப் பொட்டு வச்சி பூவும் வச்சி
நிக்கிறதைப் பாரு

வாழ மரத் தோரணமாம்
வாச நடை பாருங்க
சீறு வரிசை ஊர்வலமாம்
சொந்தபந்தம் சேருங்க

கூடி வாங்க பொண்ணுகளே
கொலவைய போட்டு ஆடுங்க
மாடி வீடு கட்டித்தரும்
மாப்பிள்ளை வேணும் தேடுங்க

பளபளப்பும் கூடிச்சா
மினுமினுப்பும் ஏறிச்சா
கண்ணாடியில் ஒன்ன நீயும்
பாக்கிறப்போ தோணிச்சா

பத்திரமா இருந்துக்க
பக்குவமா நடந்துக்க
கண்ட கண்ணும் பட்டா தப்பு
கண்மணியே ஏத்துக்க
கன்னத்துல பூத்துக்க

பல்லவி:

அடி ஆத்தி அடி ஆத்தி
ஆளானா பேத்தி
ஆகாசமே கண்ணு வைக்க
பொங்கி நிக்கும் பருத்தி

சரணம் 1:

ஊராடுற வாயக் கொஞ்சம்
உள்ள பூட்டி வைய்யி
வாலாட்டுற வேலை எல்லாம்
வேணாம் தள்ளி வைய்யி

காலாடுற கொலுசுக்குந்தான்
பூத்த கதை சொல்லு
மேலாடுற சட்டைத்துணிய
லூசா தைக்கச் சொல்லு

ஆக மொத்தம் நீயும் இப்போ
பொம்பள தான் கேளு
பொத்தி வச்சி பாத்துக்கம்மா
மோசமான ஊரு

இஷ்டத்துக்கு ஊரைச்சுத்த
கூடாதடி ரோசு
சத்தம் போட்டு பேசாதடி
மெல்லமா நீ பேசு

தொகையறா:

வளையலு குலுங்குற ஓசை
வானத்தை எட்டுந்தான்
தாவணி போடுற ஆசை
நாணத்தை கூட்டுந்தான்

சரணம் 2.

பூவே ஒன்ன பாக்கிறப்போ
பூக்குதம்மா கண்ணு
தாயும் வந்து பாத்திடத்தான்
ஏங்குதம்மா நெஞ்சு

சாத்திரத்தைச் சொல்லி ஒன்ன
பூட்டி வைக்கும் ஊரு
ஏத்துக்காத பெண்ணே நீயும்
எதிர்த்துக் கேள்வி கேளு

உண்மையில பெண்ணினந்தான்
படைக்கிற கடவுள்
ஆணைக் கூட பொம்பளை தான்
சுமக்கணும் கருவில்.

தீட்டு என்று தள்ளிவைக்கும்
வேலையத்த ஊரு
சாத்திரத்தைக் கொள்ளி வச்சி
உன் வேலைய பாரு

கெண்டக் காலு கெளுத்தி
கொண்ட போட்ட கொழுந்தி
ஒலகத்துப் பேரழகா
ஒன்னப் பெத்தா ஒருத்தி