சிப்காட் தொழிலாளர்கள் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழா முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் பங்கேற்பு

சிப்காட் தொழிலாளர் நலச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் பங்கேற்றார்.
சென்னையை அடுத்த ஒரக்கடம், இருங்காட்டுக்கோட்டை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்காக கடந்த 2014 ஆண்டு தொடங்கப்பட்டதுதான் சிப்காட் தொழிலாளர் நலச் சங்கம். இந்த சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்த சங்கத்தின் ஐம்பெரும் விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவுக்கு சங்கத்தின் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், பத்திர பதிவுத்துறையின் முன்னாள் ஐ.ஜி. ஆறுமுக நயினார், வருவாய்த்துறை துணைத் செயலாளர் சுவாமிநாதன், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.நூருல்லா ஆகியோர் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
விழாவில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படத்தை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் சிப்காட் தொழிலாளர் நலச் சங்கம், அப்துல் கலாம் உலக நிறுவனம் இணைந்து தொடங்க உள்ள ‘கலாம் பள்ளி’ -க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்திப் பூக்கள் என்ற பத்திரிக்கை வெளியீடப்பட்டது.
தொடர்ந்து சிப்காட் தொழிலாளர் நலச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. 3ஆம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி தொழிலாளர்களுக்காக அமைய உள்ள டவுன்சிப் விவரங்கள் வெளியிடப்பட்டது.