நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதும் நான் எடுத்த முடிவுதான்.
தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவில் எனது முழு திறமையும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. எல்லா மொழி படங்களிலும் பெயர் வாங்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. அதை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன். குறைந்த காலத்தில் திறமையான முன்னணி நடிகையாக என்னை நிலைநிறுத்தி இருக்கிறேன்.
கமல்ஹாசன் மகள் என்பது சினிமாவில் எனது அறிமுகத்துக்கு மட்டும் பயன்பட்டது. கடைசிவரை கமல் மகள் என்ற அந்தஸ்து உதவாது என்றும் முதல் வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்றும் எனது தந்தை கூறி இருக்கிறார். அதை மனதில் வைத்து செயல்படுகிறேன். எனது தந்தை எல்லா விஷயங்களையும் கற்று இருக்கிறார். நடிப்பு, பாடல், இயக்கம் என்று எல்லாவற்றிலும் அவருக்கு அனுபவம் இருக்கிறது. அதுபோல் எனக்கும் எல்லாவற்றையும் கற்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
வட இந்திய, தென் இந்திய மொழி படங்கள் என்று பார்க்காமல் எல்லா மொழிகளிலும் நடித்து பெயர் வாங்குவேன். சவாலான வேடங்களில் நடித்து எனது திறமையை வெளிப்படுத்த ஆர்வம் இருக்கிறது. அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களுக்காக காத்து இருக்கிறேன். அது எந்த மொழி படமாக இருந்தாலும் நடிப்பேன்.” இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.