கோவில்பட்டியில் நகராட்சியில் போராட்டம் நடத்திய வணிகர்கள் கைது – கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைப்பு

கோவில்பட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் நகராட்சி அதிகாரிகள் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருவதாகவும், பாலிதீன் உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கமால் வணிகர்களை நகராட்சி நிர்வாகம் துன்புறுத்தி வருவதாகவும், அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடைபெறுவதை கண்டித்தும், தமிழ்நாடுவணிகர் சங்கங்களின் பேரரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் நகராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க வணிகர்கள் முயன்ற போது, ஆணையர் வணிகர்களை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 44 வணிகர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வணிகர்களின் கைதினை கண்டித்து கோவில்பட்டி நகரில கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.