பெஃப்சி தொழிலாளர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் சம்பளப் பிரச்னை தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இதனால் பெஃப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களை படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். “இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும், பெஃப்சி தொழிலாளர்களுடன் மட்டுமே தயாரிப்பாளர்கள் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே இருந்த சம்பள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு இடையேயான பொதுவிதி புத்தகத்தை விரைவில் வெளியிட வேண்டும்,” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெஃப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரஜினியின் ‘காலா’, விஜய்யின் ‘மெர்சல்’ உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட திரைப் படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வேலைநிறுத்தம் படக் குழுவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ரஜினியின் ‘காலா’, விஜய்யின் ‘மெர்சல்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டாலும், விஷாலின் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு தொடருகிறது. பெஃப்சி தொழிலாளர்களுக்குப் பதிலாக மாற்றுத் தொழிலாளர்களை வைத்து ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி சிதம்பரத்தில் நடைபெற்று வருகிறது.